Sanju Samson - Aakash Chopra Twitter
கிரிக்கெட்

உலகக்கோப்பை அணியில் சஞ்சு சாம்சனுக்கு இடமிருக்குமா? முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா பதில்!

இந்திய அணி தங்களுடைய 11 வீரர்கள் கொண்ட ஒருநாள் அணியை தயார் செய்வதில் சஞ்சு சாம்சன் இடம்பெற வாய்ப்பில்லை என்று முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

Rishan Vengai

2023 ஒருநாள் உலகக்கோப்பை தொடர் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி தனது அணிக்கு தேவையான 11 வீரர்களை தேர்வு செய்யும் முயற்சியில், அவர்களை சுழற்சி முறையில் பயன்படுத்திவருகிறது. இதற்காக “வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் இந்திய அணிக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது” என்று தெரிவித்திருந்த கேப்டன் ரோகித் சர்மா, முதல் ஒருநாள் போட்டியில் அவருடைய இடத்தை இளம் வீரர்களுக்காக தியாகம் செய்து கடைசியில் களமிறங்கி விளையாடினார்.

ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் அணியில் இல்லாத நிலையில், இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பொறுப்பு சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுவது ரசிகர்களால் விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில், உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு இருக்குமா என்பது குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

இஷான் கிஷன் 4-வது இடத்தில் விளையாடாதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் பொறுப்பில் களமிறக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ‘ரிஷப் பண்ட் இல்லாத போது நீங்கள் நிச்சயம் சஞ்சு சாம்சனுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும்’ என்ற குரல், பல மாதங்களாகவே ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அதற்கேற்றார்போல் ஒருநாள் கிரிக்கெட்டுக்கான சமீபத்திய இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டார். அதே நேரத்தில் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்தவரான இஷான் கிஷனும் அணியில் இணைக்கப்பட்டிருந்தார்.

Sanju Samson

இஷான் இந்திய அணிக்கு இரண்டாவது வாய்ப்பாக இருப்பார் என்று நினைத்த வேளையில், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு முன்னதாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதேநேரம் இஷான் 4-வது இடத்தில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், ரோகித் சர்மா பின்வரிசையில் களமிறங்கி இஷான் கிஷன் முதல் வரிசை வீரராக களமிறங்கினார். அதேபோல சூர்யகுமார் யாதவ் 6-வது நிலை வீரராக விளையாடுவார் என்ற எதிர்ப்பார்ப்பையும், இந்திய அணி குழப்பத்தில் தள்ளியிருந்தது.

SKY - Samson - Ishan

இந்நிலையில் இதுகுறித்து தன்னுடைய யு-டியூப் சேனலில் பேசியிருக்கும் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, “உங்களுக்கு (அணிக்கு) நீங்களே சவால் விடும் வகையில், டாஸ் வென்றால் முதலில் பேட் செய்யுங்கள். இந்த முடிவு தொடக்கத்தில் சற்று கடினமாக இருக்கலாம். ஆனால் ஒரு நல்ல அணியை தேர்வு செய்ய இப்படிப்பட்ட சவாலை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைத்தையும் எளிதாகவே செய்துவிட்டால் உலகக் கோப்பைக்கு எப்படித் தயாராவீர்கள்? இஷான் கிஷனையும், சூர்யகுமாரையும் ஏன் குழப்பத்தில் தள்ளுகிறீர்கள்?

நீங்கள் கிஷனை 4-வது இடத்தில் நிச்சயம் விளையாடவைக்க வேண்டும். சூர்யாவை ஃபினிசராக பார்க்கிறீர்கள் என்றால் 6-வது இடத்தில் அவரை பயன்படுத்த வேண்டும். உங்களின் பேட்டிங் வரிசையை இயல்பானதாக வைத்திருங்கள். அதில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலிக்கு பிறகு இஷான் கிஷனை 4-வது இடத்தில் பயன்படுத்துங்கள். நீங்கள் விளையாட விரும்பும் வீரர்களை வைத்து, போட்டியை விளையாடுவது முக்கியம்” என்று கூறினார்.

சஞ்சு சாம்சன் விளையாட முடியாது!

“சஞ்சு விளையாடலாமா என்ற கேள்வி உங்கள் மனதில் இருக்கலாம். சஞ்சு சாம்சன் இப்போது விளையாட முடியாது என்றே நான் நினைக்கிறேன். சஞ்சு விளையாடினால் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்காது. அதேபோல கிஷன் முதல் இடத்திலும் விளையாட வாய்ப்பில்லை, அவர் 4வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும். சஞ்சு சாம்சன் விளையாட மாட்டார் என்பது சற்று வருத்தமான உண்மையாக இருந்தாலும், அவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன்” என பேசியுள்ளார்.

Aakash Chopra

இந்திய பேட்டிங் வரிசையில் இடது கை பேட்டர்கள் இல்லாமல் இருப்பது பல வருடங்களாக பெரும் குறையாகவே இருக்கிறது. அதிலும் ரிஷப் பண்ட் இல்லாத போது, இஷான் கிஷனுக்கு தான் வாய்ப்பு வழங்கப்படுமா, எனில் சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுமா என்ற கவலை சாம்சன் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் இத்தகைய எண்ணத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணி எந்தவகையில் கைகொடுத்தது, தற்போதும் அதே முயற்சியில் வீரர்களை இறக்க வேண்டுமா, இல்லை கோப்பையை வெல்ல எந்த வீரர்கள் சரியாக இருப்பார்கள் என்ற அனைத்தையும் எதிர்நோக்கி இந்திய அணி தான் சரியான முடிவை எடுக்க வேண்டும்.