இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், நியூசிலாந்தை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. இதனைத் தொடர்ந்து 2023-ம் ஆண்டு 13-வது ஒருநாள் உலகக் கோப்பை ஆடவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. வரும் அக்டோபர் மாதம் 5-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 19-ம் தேதி வரை உலகக் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. போட்டி நடைபெறும் நாட்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டு, பிற காரணங்களுக்காக அது மீண்டும் மாற்றி அமைக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஒரு நாள் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்த இங்கிலாந்தின் பென்ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
முன்னதாக, பென்ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டிகளில் மீண்டும் விளையாட வேண்டும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பென் ஸ்டோக்ஸிடம் கோரிக்கை வைத்திருந்தது. உலகக்கோப்பையை கருத்தில் கொண்டே இந்த கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஒரு நாள் போட்டிகளுக்கான பயிற்சியாளரும் ஸ்டோக்ஸ் வருகை குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இங்கிலாந்து அணி நியூசிலாந்து உடன் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ள நிலையில், அதற்கான வீரர்கள் பட்டியலை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் பென்ஸ்டோக்ஸ் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் மீண்டும் அணிக்கு திரும்பியதில் ஒட்டு மொத்த இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். ஏனெனில் அதிரடிக்கும் நிதான ஆட்டத்திற்கும் பெயர் பெற்றவர் பென் ஸ்டோக்ஸ். அடிக்கடி பந்துவீசி விக்கெட்களையும் வீழ்த்தும் வித்தைகளை தெரிந்தவர்.
2011 முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் 105 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள பென்ஸ்டோக்ஸ் அதில் 90 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்துள்ளார். அதில் 2924 ரன்களை எடுத்துள்ள ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 102 ரன்களை அடித்துள்ளார். அவரது சராசரி 39 ஆக உள்ள நிலையில் ஸ்ட்ரைக் ரேட் 95.1 ஆக உள்ளது. பென்ஸ்டோக்ஸ் 3 சதங்களையும் 21 அரைசதங்களையும் அடித்தது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் ஒரு நாள் கிரிக்கெட்டில் 74 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். பீல்டிங்கிலும் அசத்தும் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டியில் 49 கேட்சுகளையும் 6 ரன் அவுட்களையும் செய்துள்ளார்.
கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணியால் ரூ.16.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பென் ஸ்டோக்ஸ் சில போட்டிகளில் மட்டுமே ஆடினார். இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது. நடந்து முடிந்த ஆஷிஸ் தொடரில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக களமிறங்கிய பென்ஸ்டோக்ஸ் இரண்டாவது போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 155 ரன்களை விளாசினார். 5 போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் மொத்தமாக 407 ரன்களை விளாசினார். இந்நிலையில் அவர் மீண்டும் இங்கிலாந்து அணிக்காக ஒரு நாள் போட்டிகளில் களமிறங்க உள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடருக்கான இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்த வீரர்களின் பட்டியல்:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோவ், சாம் கர்ரன், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, மார்க் வூட், கிறிஸ் வோக்ஸ்.
நியூசிலாந்து உடனான டி20 தொடருக்கான வீரர்கள் பட்டியல்:
ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயின் அலி, ஜானி பேர்ஸ்டோவ், ஹாரி புரூக், பென் டக்கெட், லியாம் லிவிங்ஸ்டன், டேவிட் மாலன், வில் ஜாக்ஸ், கஸ் அட்கின்சன், ஜான் டர்னர், ஜோஷ் டங்கு, லூக் வூட், சாம் குர்ரன், ரெஹான் அகமது, அடில் ரஷித் .