Asia Cup History Matches Twitter
கிரிக்கெட்

ஆசிய கோப்பை வரலாற்றில் சிறந்த 5 போட்டிகள்! இந்த சம்பவங்களை எல்லாம் எப்போதும் மறக்க முடியாது!

சச்சின் டெண்டுல்கரின் 100வது சதம், விராட் கோலியின் பாகிஸ்தானுக்கு எதிரான 183 ரன்கள், கிங் கோலியின் முதல் டி20 சதம் என பல மறக்க முடியாத சம்பவங்களை ஆசியக்கோப்பை தொடர் மில்லியன் இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக தந்துள்ளது.

Rishan Vengai

ஆசியக் கண்டம் முழுவதிலிருந்தும் சிறந்த கிரிக்கெட் திறமைகளை வெளிக்கொண்டுவரக்கூடிய ஒரு தொடராக இருந்துவரும் ஆசிய கோப்பை, எண்ணற்ற பரபரப்பான கிரிக்கெட் நிகழ்வுகளுக்கு சாட்சியாக உள்ளது. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத கடைசி ஓவர் வரையிலான போட்டிகள் முதல் அதிர்ச்சியூட்டும் அப்செட்டுகள் நிறைந்த போட்டிகள் வரை மகிழ்ச்சி சோகம் என ரசிகர்களுக்கு மறக்க முடியாத பல தருணங்களை விருந்தாக படைத்துள்ளது. அந்தவகையில் மறக்கவே முடியாத பல போட்டிகளுக்கு மத்தியில் சில சுவாரசியம் நிறைந்த போட்டிகளை மட்டும் விவரிக்கிறது இந்த கட்டுரை!

1) இந்தியாவின் கடைசி நம்பிக்கை கேதார் ஜாதவ்! 2018 ஆசியகோப்பை ஃபைனல் Ind-Ban!

Kedar Jadav

ஆசியக்கோப்பை தொடரின் 2018 எடிஷனில் அற்புதமாக செயல்பட்ட வங்கதேச அணி, நாக் அவுட் போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளை வெளியேற்றி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. அதற்கு முன்பு 2 முறை பைனல் வரை வந்து தோல்வியை சந்தித்திருந்த வங்கதேச அணி, இந்தமுறை எப்படியாவது கோப்பையை வென்றுவிட வேண்டும் என்ற தீவிரத்தோடு களமிறங்கியது.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸை தவிர மற்ற எந்த வங்கதேசவீரரும் நிலைத்து நின்று ஆடவில்லை. ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருந்தாலும், மறுபுறம் நிலைத்து நின்ற லிட்டன் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என பறக்கவிட்டு இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார். நல்ல ஃபார்மில் இருந்த தாஸ் தனது முதல் ஆசியக்கோப்பை சதத்தை பதிவு செய்ய, வங்கதேச அணி 222 ரன்கள் சேர்த்தது. 222 ரன்களில் லிட்டன் தாஸ் மட்டும் 121 ரன்கள் அடித்திருந்தார்.

Kedar Jadav

‘223 ரன்கள் தானே ஈசியா சேஸ் செய்துவிடலாம்’ என்று களமிறங்கிய இந்திய அணியை கதிகலங்க வைத்தனர் வங்கதேச பந்துவீச்சாளர்கள். ரோகித் சர்மா நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் மறுமுனையில் இருந்த அனைத்து வீரர்களையும் வெளியேற்றிக்கொண்டிருந்தது வங்கதேசம். ரோகித்தின் போராட்டம் 48 ரன்னில் முடிவுக்கு வர, 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த தினேஷ் கார்த்திக் மற்றும் எம் எஸ் தோனி இருவரும் நிதானமாக விளையாடினர். ஆனால் தினேஷ் கார்த்திக் 37 ரன்னில் வெளியேறி எம் எஸ் தோனியும் 36 ரன்களில் வெளியேற 160க்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்திய அணி. இந்த சூழ்நிலையில் பயன்படுத்தி நெருக்கடியாக பந்துவீசி அழுத்தத்தை கூட்டிய வங்கதேச பவுலர்கள், இந்தியாவின் லோயர் ஆர்டர் பேட்டர்களை அழுத்தத்தில் தள்ளினர். ஒவ்வொரு ஓவருக்கும் 1 அல்லது 2 ரன்களே வர போட்டி விறுவிறுப்பானது.

2 ரன்களில் அடுத்தடுத்து ஜடேஜா மற்றும் புவனேஷ்குமார் வெளியேற, போட்டியை வென்று கொடுக்க வேண்டிய பொறுப்பு தசைப்பிடிப்பால் பாதிக்கப்பட்ட கேதார் ஜாதவின் தோள்களில் சேர்ந்தது. அதிகப்படியான வலியால் ரிட்டயர்ட் ஹர்ட்டில் வெளியேறிய கேதார் ஜாதவ், இந்தியாவின் வெற்றிக்காக மீண்டும் பாதிக்கப்பட்ட கால்களுடன் களத்திற்குள் வந்தார். அடுத்து விக்கெட்டை விழாமல் பார்த்துக்கொண்ட கேதார் படிப்படியாக இந்திய அணியை கோப்பையை ஏந்த அழைத்துச்சென்றார். முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. என்ன தான் வங்கதேசம் தோற்றிருந்தாலும், வங்கதேசத்தின் பந்துவீச்சாளர்கள் இந்திய ரசிகர்களின் இதயத்துடிப்பை எகிறவைத்தனர். வங்கப்புலிகளின் இந்த ஃபைட்டிங்க் ஸ்பிரிட் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது.

2) 1 பந்துக்கு 4 ரன் இருந்த போது சேத்தன் சர்மாவை சிக்சருக்கு அனுப்பிய பாக். வீரர்! (Ind-Pak Final 1986)

IND - PAK 1986 Final

ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளுக்கு இடையே நடைபெற்ற (Austral-Asia Cup) ஆஸ்டிரல்-ஆசிய கோப்பை 1986ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அந்த தொடரில் ஆசிய கண்டத்தின் முக்கிய அணிகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் கலந்து கொண்டன. பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின.

முதலில் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்களான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் (75 ரன்கள்) மற்றும் சுனில் கவாஸ்கர் (92 ரன்கள்) இருவரின் அசத்தலான ஆட்டம் இந்தியாவை 245 ரன்களுக்கு எடுத்துச்சென்றது. 246 ரன்கள் என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் சொதப்பினாலும், மிடில் ஆர்டர் வீரராக வந்த ஜாவேத் மியான்டட் தனியொரு ஆளாக போராடினார். அடுத்தடுத்த விக்கெட்டுகளை சேத்தன் சர்மா மற்றும் மதன்லால் இருவரும் வெளியேற்ற 3 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் என விளாசி நிலைத்து நின்று ஆடிய ஜாவேத் இறுதிப்போட்டியில் சதமடித்து அசத்தினார். கடைசி பந்து வரை சென்ற இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய சேத்தன் சர்மா கடைசி ஓவரை வீசினார்.

கடைசி 1 பந்துக்கு 4 ரன்கள் தேவை என்ற கடினமான நிலைக்கு செல்ல இந்தியா தான் வெற்றிபெறும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி பந்தை சிக்சருக்கு அனுப்பிய ஜாவேத் பாகிஸ்தான் அணிக்கு 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தார். இந்தியா-பாகிஸ்தான் என்ற பெரிய ரைவல்ரிக்கு விதை போட்டது இந்த போட்டிதான். அந்த பெருமை ஜாவேத் மியாண்டட்டுக்கே சேரும்.

3) 183 ரன்கள் விரட்டி Chase மாஸ்டராக உருவெடுத்த விராட்! (IND-Pak 2012 Asia Cup)

Virat Kohli

ரன் சேஸிங்கில் விராட் கோலி எவ்வளவு ஆபத்தானவர் என்பதற்கு பிள்ளையார் சுழி போட்டது இந்த போட்டிதான். 2012 ஆசியகோப்பையின் 5வது லீக் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான முகமது ஹஃபீஷ் (105 ரன்கள்) மற்றும் நஸிர் ஜாம்செத் (112 ரன்கள்) இருவரும் அற்புதமாக விளையாடி சதங்களை பதிவு செய்தனர். 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 329 ரன்களை குவித்தது.

Virat - Sachin

330 என்ற மிகப்பெரிய சேஸிங்கை இந்தியா அடித்துவிடுமா என்ற கேள்வி எல்லோருக்கும் அதிகமாகவே இருந்தது. போதாக்குறைக்கு ஓப்பனரான கவுதம் கம்பீரும் 0 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் 2வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இரண்டாவது விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்த இந்த ஜோடியில், சச்சினை 52 ரன்னில் வெளியேற்றி முடிவுக்கு கொண்டுவந்தார் சயீத் அஜ்மல். 3வது விக்கெட்டுக்கு கோலியோடு ரோகித் சர்மா கைக்கோர்க்க இருவரும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்க ஆரம்பித்தனர். 100 ரன்கள், 150 ரன்கள் என கடந்துகொண்டே சென்ற விராட் கோலி தன்னுடைய முதல் இரட்டை சதத்தை அடிப்பார் என எதிர்ப்பார்த்த போது 183 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். கோலியின் உதவியால் 47.5 ஓவரிலேயே இலக்கை எட்டி வெற்றிபெற்றது இந்திய அணி.

4) 2 ரன்கள் வித்தியாசத்தில் கோப்பையை நழுவவிட்ட வங்கதேச அணி! ( Pak-Ban 2012 Asia Cup Final)

Pak-Ban 2012 Asia Cup Final

2012ஆம் ஆண்டு ஆசிய கோப்பையானது வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பொன்னான காலமாகும். பலம் வாய்ந்த இந்திய அணிக்கு எதிராக ஒரு அற்புதமான வெற்றியை பதிவு செய்ததன் பலனாக, ஆசிய கோப்பை பைனலில் விளையாட முதல்முறையாக தகுதிப்பெற்றிருந்தது அந்த அணி. இந்தியாவுக்கு எதிரான 290 ரன்கள் சேஸிங்கை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றிருந்தது வங்கதேச அணி.

அந்த போட்டியில் தான் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தன் 100வது சதத்தை பதிவு செய்திருந்தார். புள்ளிப்பட்டியலில் இந்தியாவும், வங்கதேசமும் 8 புள்ளிகளுடன் இருந்தாலும் வங்கதேசம் இந்தியாவுடன் வெற்றிபெற்றதன் காரணமாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வங்கதேச பவுலர்கள் பாகிஸ்தானை 236 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். 237 ரன்களை விரட்டி முதல் ஆசியக்கோப்பையை வெல்லலாம் எனும் பெரும் கனவோடு களமிறங்கிய வங்கதேச அணிக்கு தடையாக இருந்தனர் பாகிஸ்தான் பவுலர்கள். ஓபனராக களமிறங்கிய தமிம் இக்பால் அபாரமாக விளையாடி நல்ல தொடக்கத்தை அமைத்துகொடுத்தார்.

Tamim Iqbal

60 ரன் எடுத்த போது தமிம் வெளியேற ஆட்டம் கண்டது வங்கதேச அணி. பின்னர் மிடில் ஆர்டராக வந்த ஷாகிப் அல் ஹசன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வங்கதேசத்தை மீண்டும் போட்டிக்குள் எடுத்து வந்தார். 7 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டி 68 ரன்கள் குவித்த ஷாகிப்பை போல்டாக்கி மீண்டும் பாகிஸ்தான் அணியை போட்டிக்குள் எடுத்துவந்தார் சீமா.

இறுதிவரை விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியானது கடைசி 6 பந்துக்கு 9 ரன்கள் தேவை என்ற நிலைக்கு சென்றது. முதல் 4 பந்துக்கு 5 ரன்கள் எடுக்க, கடைசி 2க்கு 4 ரன்கள் என மாற ஆட்டம் சூடு பிடித்தது. அடிக்ககூடிய வீரராக இருந்த மஹமுதுல்லா ஸ்டிரைக்கிற்கு செல்ல, சரியான நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட சீமா மற்றொரு பக்கத்தில் இருந்த அப்துரை போல்ட்டாக்கி வெளியேற்றினார். கடைசி 1 பந்துக்கு 4 என போட்டி செல்ல, அந்த பந்தில் 1 ரன்னை மட்டுமே வங்கதேசத்தால் எடுக்க முடிந்தது. பரபரப்பான போட்டியின் முடிவில் பாகிஸ்தான் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

5) 2 ரன்னில் சூப்பர் 4 வாய்ப்பை தவறவிட்ட ஆப்கானிஸ்தான்! ( SL-AFG Asia Cup 2023)

Rashid Khan

ஆசிய கோப்பை அணிகளில் வளர்ந்துவரும் அணியாக இருக்கும் ஆப்கானிஸ்தான் இதுவரை 2018 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் சூப்பர் 4 சுற்றுவரை தகுதிபெற்றுள்ளது. அந்த வகையில் நடப்பு 2023 ஆசியக்கோப்பையிலும் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்பு ஆப்கானிஸ்தான் அணிக்கு சிறப்பாக இருந்தது. இல்லை அந்த வாய்ப்பை ஆப்கானிஸ்தான் அணி உருவாக்கியது என்றே சொல்லவேண்டும்.

குரூப் ஸ்டேஜின் 6வது போட்டியில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடிய ஆப்கானிஸ்தான், அந்த அணியை வென்றுவிட்டால் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்போடு களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி குசால் மெண்டிஸின் 92 ரன்கள் உதவியால் 291 ரன்கள் சேர்த்தது. ஆப்கானிஸ்தான் அணி இந்த இலக்கை 37.1 ஓவர் முடிவில் எட்டிவிட்டால் இலங்கையை வெளியேற்றி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியும் என வரையறுக்கப்பட்டது.

தங்களுடைய வாய்ப்பிற்காக அற்புதமாக பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் 35 ஓவரிலேயே 276 ரன்களை எட்டினர். திரும்பிய பக்கம் எல்லாம் சிக்சர்களாக பறக்கவிட்ட முகமது நபி ஆப்கானிஸ்தானின் வாய்ப்பிற்கு உயிரூட்டினார். இறுதியாக களத்திற்கு வந்த ரசீத் கான் சிறப்பாக விளையாட, களத்திலிருந்த வீரர்களிடம் வெற்றிக்கான வழிகள் முறையாக விளக்கப்படவில்லை. கடைசி நேர குழப்பத்தில் 37.5 ஓவரில் கூட வெற்றிபெற வழியிருப்பது தெரியாமல் அடிப்பதற்கு சென்று விக்கெட்டுகளை பறிகொடுத்தனர் ஆப்கான் வீரர்கள்.

முடிவில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. ஆப்கானிஸ்தான் அணியின் இந்த ஆட்டம் ஆசிய கோப்பை வரலாற்றில் நிச்சயம் மறக்கமுடியாத போட்டியாக மாறியது.