inzamam-ul-haq pt web
கிரிக்கெட்

இளம் இன்சமாமின் அதிரடியால் 1992 அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான்; வேர்ல்ட் கப் மெமரீஸ் - எபிசோட் 3

2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி இந்தியாவில் தொடங்குகிறது. 13வது உலகக் கோப்பைத் தொடரான இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதுவரை நடந்த உலகக் கோப்பைகளின் சிறந்த தருணங்களை சற்று அசைபோடுவோம்.

Viyan

1992 உலகக் கோப்பை பல காரணங்களுக்காக நினைவில் கொள்ளப்படவேண்டியதாக அமைந்தது. முதல் முறையாக கலர் ஜெர்ஸி, வெள்ளை நிறப் பந்துகள் இந்த உலகக் கோப்பையில் தான் பயன்படுத்தப்பட்டன. கறுப்பு சைட் ஸ்கிரீன்கள் உலகக் கோப்பையில் அறிமுகம் ஆனதும் இந்தத் தொடரில்தான். நிறவெறி பிரச்சனை காரணமாக சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தடை பெற்றிருந்த தென்னாப்பிரிக்க அணி மீண்டும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டது. இதையெல்லாம் விட இந்தத் தொடர் இன்சமாம் உல் ஹக்காலும் மறக்க முடியாத ஒன்றாக மாறியது.

இன்சமாம் உல் ஹக் என்றாலே பலருக்கும் ஞாபகம் வருவது ஜான்டி ரோட்ஸ் அவரை சூப்பர் மேன் போல பறந்து ரன் அவுட் செய்தது தான். 30 ஆண்டுகள் ஆயிருந்தாலும் இன்றுவரை அனைத்து கிரிக்கெட் ரசிகர்களாலும் நினைவுகூறப்படுகிறது அந்த ரன் அவுட். ஆனால் அதே உலகக் கோப்பையில் தன் சிறப்பான ஆட்டத்தாலும் தனக்கொரு பாசிடிவ் முத்திரை ஏற்படுத்திக்கொண்டார் இன்சமாம் உல் ஹக்.

குரூப் பிரிவில் நான்காவது இடம் பிடித்திருந்த பாகிஸ்தான், முதலிடம் பிடித்த நியூசிலாந்து அணியை அரையிறுதியில் சந்தித்தது. சொந்த மண்ணில் விளையாடியதாலும் அவர்களின் அதிரடி அணுகுமுறையாலும் நியூசிலாந்து அந்தத் தொடரில் பட்டையைக் கிளப்பியது. லீக் சுற்றின் முதல் 7 போட்டிகளையும் வென்று பிரமிக்கவைத்தது அந்த அணி. இருந்தாலும் பாகிஸ்தான் அணிக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த அணியை இந்த உலகக் கோப்பையின் குரூப் சுற்றில் தோற்கடித்திருந்த ஒரே அணி பாகிஸ்தான் மட்டும்தான்! அதனால் எப்படியும் அவரை அரையிறுதியில் அசைத்துவிடமுடியும் என்று அந்த அணி நம்பியது. ஆனால் போட்டி அப்படி இருக்கவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ரன்கள் குவித்தது நியூசிலாந்து. அந்த அணியின் கேப்டன் மார்டின் குரோவ் அதிரடியாக விளையாடி 83 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். கென் ரூதர்ஃபோர்டும் அரைசதம் அடித்திருந்தார். அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு சேஸிங் எளிதாக இருக்கவில்லை. ஏழாவது ஓவரிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார் ஆமிர் சோஹைல். ஆனால் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கான் ஒரு அதிரடி முடிவு எடுத்து மூன்றாவது வீரராகக் களமிறங்கினார். அவரும் ரமீஸ் ராஸாவும் நிதானமாக விளையாடி 54 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அடுத்து வந்த ஜாவேத் மியான்தத்தும் கூட ஓரளவு நன்றாகவே ரன் சேர்த்தார்.

பாகிஸ்தான் அணி நன்றாக ரன் எடுத்துவந்திருந்தாலும், ரன் ரேட் அவர்களுக்குப் பிரச்சனையாக இருந்தது. நான்காவது விக்கெட்டாக சலீம் மாலிக் அவுட்டாகி வெளியேறியபோது அந்த அணிக்கு 95 பந்துகளில் 123 ரன்கள் தேவைப்பட்டது. இன்றைய காலகட்டத்திலேயே அது ஒருநாள் போட்டியில் பெரிய இலக்கு. அப்படியிருக்கையில் 1992ல் எப்படி இருந்திருக்கும்?! எப்படியும் நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும் என்றே கருதப்பட்டது. ஆனால் ஆறாவது வீரராகக் களமிறங்கிய இன்சமாம் உல் ஹக் அதை அப்படியே மாற்றினார்.

களமிறங்கிய முதலே அதிரடி காட்டிய அவர், 37 பந்துகளில் 60 ரன்கள் விளாசினார். 7 ஃபோர்களும் 1 சிக்ஸரும் விளாசி நியூசிலாந்து பௌலர்களை மிரளவைத்தார் அவர். சோகம் என்னவெனில் இந்தப் போட்டியில் கூட அவர் ரன் அவுட் தான் ஆனார். ஒட்டுமொத்தமாக ஆட்டத்தை மாற்றிய அவர் அவுட்டாகி வெளியேறும்போது பாகிஸ்தானின் வெற்றிக்கு 32 பந்துகளில் 36 ரன்கள் தேவை என்ற 50-50 நிலை ஏற்பட்டது. கொஞ்சம் பிசகியிருந்தாலும் ஆட்டம் நியூசிலாந்து பக்கம் போயிருக்கும். இருந்தாலும் இன்சமாமின் பாதையிலேயே பயணித்து மொயீன் கானும் அதிரடி காட்ட, ஒரு ஓவர் மீதமிருக்கையிலேயே இலக்கை எட்டி வெற்றி பெற்றது பாகிஸ்தான்! ஆட்டத்தை மாற்றிய தன் அதிரடி ஆட்டத்துக்காக அந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் வென்றார் இன்சமாம் உல் ஹக். அந்த இன்னிங்ஸ் தான் உலக அரங்கில் அவரது பெயரை அழுத்தமாகப் பதிவு செய்தது.