விளையாட்டு

“காவிரி பிரச்னை முதல் மும்பை தாக்குதல் வரை” ஐ.பி.எல் தொடரை ஆட்டம் காண வைத்த சர்ச்சைகள்!

“காவிரி பிரச்னை முதல் மும்பை தாக்குதல் வரை” ஐ.பி.எல் தொடரை ஆட்டம் காண வைத்த சர்ச்சைகள்!

EllusamyKarthik

கிரிக்கெட்டும் அரசியலும் பிரிக்க முடியாதது. பல மாநிலங்களில் அரசியல்வாதிகள் தான் கிரிக்கெட் சங்க நிர்வாகிகளாக உள்ளனர். 

பணம் கொழிக்கும் ஐபிஎல் தொடருக்கும் அரசியலுக்கும் இடையேயான சில சர்ச்சைகளை கொஞ்சம் பார்க்கலாம்.

பாகிஸ்தான் வீரர்கள் விளையாட தடை 

ஐபிஎல் தொடர் 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட போது பல பாகிஸ்தான் வீர்ர்கள் பங்கேற்றனர். 

அப்ரிடி, யூனிஸ்கான், சொகைல் தன்வீர், மிஸ்பா உல்ஹக், சோயப் அக்தர் உள்ளிட்ட வீரர்கள் வெவ்வேறு ஐபிஎல் அணிகளில் விளையாடினர். 

அந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்தியா சென்று விளையாட பாகிஸ்தான் வீரர்களுக்கு அந்நாடு தடை விதித்தது. 

அதனையடுத்து ஐபிஎல் ஏலத்தில் பாகிஸ்தான் வீரர்களை எந்த அணி நிர்வாகமும் ஏலம் எடுக்கவில்லை. 

இங்கிலாந்தில் குடியேறிய அசார் முகம்மது மட்டும் இதில்  விதிவிலக்காக சில ஆண்டுகள் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார்.

இலங்கை தமிழர் விவகாரம் 

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்டிக்கும் வகையில், 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சென்னையில் இலங்கை அணி வீரர்கள் விளையாடுவதற்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தார். 

இதையடுத்து சென்னையில் அணியில் இடம் பெற்றிருந்த இலங்கை வீரர்கள் நுவான் குலசேகரா, அகிலா தனஞ்செயா ஆகியோரும் நட்சத்திர வீரர்கள் மலிங்கா, ஜெயவர்த்தனே, சங்ககாரா ஆகியோரும் சென்னையில் விளையாடவில்லை.

தண்ணீர் பிரச்னை : காவிரி விவகாரம் 

இதே போல கடந்த 2018 ஆம் ஆண்டு காவிரிநதிநீர் ஆணையம் அமைக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சுற்றிலும் போராட்டம் நடைபெற்றது. 

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது மைதானத்துக்குள் இருந்த சில ரசிகர்கள் வீரர்கள் மீது காலணியை வீசிய சம்பவமும் அரங்கேறியது. 

சிலர் காவிரி ஆணையத்தை வலியுறுத்தி பதாகைகளையும் ஏந்தி போராட்டம் நடத்தினர். 

கருப்பு சட்டை அணிந்து வந்தவர்கள் யாரும் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னை அணியின் ஹோம் மேட்ச் போட்டிகள் அனைத்தும் புனேவுக்கு மாற்றப்பட்டது.

தண்ணீர் பிரச்னைமும்பை ஆட்டங்கள் ரத்து 

இதே தண்ணீர் பிரச்னையை மும்பையும் சந்தித்தது. 2016 ஆம் ஆண்டில் நிலவிய வறட்சி காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தக்கூடாது என மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 

இதை விசாரித்த நீதிமன்றம், மும்பை மற்றும் புனேவில் நடைபெறவிருந்த போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றுமாறு உத்தரவிட்டது. இதனால் இறுதிப்போட்டி உள்ளிட்ட 13 போட்டிகளை நடத்தும் வாய்ப்பை மகாராஷ்டிரா இழந்தது

இதையும் படிக்கவும் : https://bit.ly/3hBZsfz