விளையாட்டு

'சீக்கிரம் வந்துருங்க அலிபாய்!’ - CSK-வின் ப்ளேயிங் லெவனும் சில பிரச்னைகளும்

'சீக்கிரம் வந்துருங்க அலிபாய்!’ - CSK-வின் ப்ளேயிங் லெவனும் சில பிரச்னைகளும்

webteam

ஐ.பி.எல் 15-வது சீசன் தொடங்க இன்னும் இரண்டு நாட்களே இருக்கிறது. மெகா ஏலத்திற்கு பிறகு நடக்கும் சீசன் என்பதால் ஒவ்வொரு அணியுமே பல புதுவரவுகளோடு புதிய அணியை கட்டியமைக்கும் முனைப்பில் இருக்கின்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுமே ரெய்னா போன்ற ஆஸ்தான வீரர்கள் சிலரை வெளியேற்றிவிட்டு புதிய வீரர்களை ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறது. இந்நிலையில், சிஎஸ்கேவின் புதிய ப்ளேயிங் லெவன் என்னவாக இருக்கும்? தோனியின் திட்டம் என்ன?

கடந்த சீசன்களில் தங்கள் அணியில் முக்கியமான வீரர்களாக இருந்தவர்களில் பெரும்பாலானோரை அப்படியே தக்கவைத்திருப்பதால், மற்ற அணிகளை போல ஒட்டுமொத்தமாக புதிய அணியை கட்டமைக்கும் வேலை சிஎஸ்கேவிற்கு இல்லை.

கடந்த சீசனில் சிஎஸ்கேவின் சூப்பர் ஸ்டாராக இருந்தவர் ருதுராஜ் கெய்க்வாட்டே. ‘ஸ்பார்க் இல்லை’ என ஓரங்கட்டப்பட்டவர் காட்டுத்தீயாக மாறி அனல் தெறி பெர்ஃபார்மென்ஸ்களை கொடுத்திருந்தார். ஓப்பனராக இறங்கி சரமாரியாக ஸ்கோர் செய்து, சீசன் முடிவில் 635 ரன்களோடு ஆரஞ்சு நிற தொப்பியையும் வென்றிருந்தார். அவரை ஏலத்திற்கு முன்பாக சிஎஸ்கே ரீட்டெயின் செய்து கொண்டது. இந்த சீசனிலும் சிஎஸ்கேவின் ஓப்பனிங் ஸ்லாட்டில் ஒரு இடம் உறுதியாக ருதுராஜ் கெய்க்வாட்டிற்குதான்.

ருதுராஜ் கெய்க்வாட்டின் பார்ட்னர் யார்?

ருதுராஜ் கெய்க்வாட்டோடு கடந்த சீசனில் ஓப்பனராக இறங்கியிருந்த டூப்ளெஸ்சிஸ் இந்த முறை பெங்களூருவிற்கு சென்றுவிட்டார். கடந்த சீசனில் சிஎஸ்கே சாம்பியனாக ருதுராஜ் எந்தளவிற்கு காரணமாக இருந்தாரோ அதே அளவிற்கு டூப்ளெஸ்சிஸும் காரணமாக இருந்தார். ருதுராஜை விட வெறும் 2 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்து ஆரஞ்சு தொப்பியைத் தவறவிட்டிருந்தார். இந்த முறை அவர் இல்லாதது சிஎஸ்கேவிற்கு இழப்புதான். ஆனால், அதை ஈடுசெய்யும் வகையில் ஏலத்தில் வேறு சில வீரர்களை சிஎஸ்கே வாங்கி வைத்திருக்கிறது.

ஒரு இந்தியர் + ஒரு வெளிநாட்டு வீரர் என்கிற இந்த ஓப்பனிங் காம்பீனேஷனைத்தான் பெரும்பாலான அணிகள் விரும்பும். சிஎஸ்கேவும் அப்படியே. மேத்யூ ஹேடன், மைக் ஹஸ்சி, மெக்கல்லம், ஸ்மித், வாட்சன் கடைசியாக டூப்ளெஸ்சிஸ் வரை சிஎஸ்கேவின் வெளிநாட்டு ஓப்பனர்கள் ரொம்பவே தரமானவர்களாக இருந்திருக்கின்றனர். இந்த வரிசையில் வெளிநாட்டு வீரரான டெவன் கான்வே ஓப்பனிங் இறங்குவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது. கான்வே இடது கை பேட்டர் என்பது கூடுதல் சாதகமான அம்சம். கான்வே தென்னாப்பிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்து நியுசிலாந்திற்கு கிரிக்கெட் ஆடிக்கொண்டிருப்பவர். மூன்று ஃபார்மட்களிலும் சிறப்பாக ஆடக்கூடியவர். சூப்பர் ஸ்மாஷ் டி20 தொடர்களில் பட்டையை கிளப்பியிருக்கிறார். நியுசிலாந்துக்காக ஆடியிருக்கும் டி20 போட்டிகளிலும் சிறப்பாக ஆடியிருக்கிறார். சிஎஸ்கேவின் முந்தைய வெளிநாட்டு ஓப்பனர்களின் தடங்களை நிரப்பும் திறன் படைத்தவர். அதனால், தோனியுமே ருதுராஜின் பார்ட்னராக கான்வேயின் பெயரையே டிக் அடிப்பார் என நம்பலாம்.

அடுத்ததாக நம்பர் 3 பொசிஷன். சிஎஸ்கேவின் சின்ன தலயாக அறியப்பட்ட ரெய்னாவின் நிரந்தர இடமாக ஒருகாலத்தில் இருந்தது. கடந்த சீசனிலேயே ரெய்னாவை கொஞ்சம் கீழிறக்கிவிட்டு மொயீன் அலியை தோனி அந்த நம்பர் 3 இடத்தில் ஆட வைத்திருப்பார். ரெய்னா நம்பர் 4 இல் ஆடியிருப்பார். இந்த முறை ரெய்னாவே இல்லை. அப்படியெனில் நம்பர் 3 மொயீன் அலிக்குதானே எனத் தோன்றலாம். ஆனால், அது அப்படியில்லை. ரெய்னா அணியில் இருக்கும்பட்சத்தில்தான் மொயீன் அலிக்கு நம்பர் 3 இடம் வழங்கப்படும். ரெய்னா இல்லையேல் மொயீன் அலியும் நம்பர் 4 இல்தான் இறங்குவார்.

ஆம், கடந்த சீசனில் ப்ளே ஆஃப்ஸ் நெருங்கிய சமயத்தில் ரெய்னா காயமுற்றிருப்பார். ரெய்னாவுக்கு பதில் உத்தப்பா களமிறங்கியிருப்பார். அப்போது உத்தப்பாவை நம்பர் 3 யில் இறக்கிவிட்டு மொயீன் அலி நம்பர் 4-க்கு தள்ளப்பட்டிருப்பார். உத்தப்பா எவ்வளவுக்கு எவ்வளவு மேலே ஆடுகிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு சிறப்பாக ஆடுவார். அவருடைய ரெக்கார்டுகளை புரட்டி பார்த்தால் இது புரியும். அதன்படியே ரெய்னா இல்லாத சமயத்தில் உத்தப்பா நம்பர் 3 வீரராக ஆக்கப்பட்டிருந்தார். இந்த முறையும் ரெய்னா அணியில் இல்லை. ஆக அந்த நம்பர் 3 பொசிஷனில் உத்தப்பா களமிறங்கவே அதிக வாய்ப்பிருக்கிறது. எனில், நம்பர் 4 இல் மொயீன் அலி களமிறங்குவார்.

ஆனால், விசா கிடைக்காததால் மொயீன் அலி இன்னமும் இந்தியாவிற்கே வந்து சேரவில்லை. அவர் தொடக்கத்தில் சில போட்டிகளைத் தவறவிட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. மொயீன் அலி ஆடவில்லையெனில் அது சிஎஸ்கேவிற்கு பெரிய பின்னடைவாகவே அமையும். மொயீன் அலியை சிஎஸ்கேவின் சொத்தாகவே தோனி பார்த்தார். அதனால்தான் டூப்ளெஸ்சிஸை விட மொயீனுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவரை ரீட்டெயின் செய்தனர்.

2020 சீசனில் சிஎஸ்கே கடுமையாக சொதப்பியிருந்தது. ஆனால், 2021 சீசனில் சிஎஸ்கே சாம்பியனாகியிருந்தது. ஐந்தாறு மாத இடைவெளியில் நிலைமை தலைகீழாக மாறியதற்கு மொயீன் அலியும் மிக முக்கிய காரணமாக இருந்தார். அணிக்குள் புதிதாக வந்திருந்த மொயீன் அலி, ருதுராஜ் மற்றும் டூப்ள்ஸ்சிஸுக்கு அடுத்தப்படியாக அதிக ரன்களை எடுத்திருந்தார். ஓப்பனிங்கில் பாசிட்டிவ்வான ஒரு மொமண்டம் கிடைக்க வேண்டும். அதை அப்படியே கடைசி வரை தக்கவைக்க வேண்டும் என்பதே தோனியின் விருப்பம்.

நம்பர் 3/4 இல் களமிறங்கி அதிரடியாக ஆடி தோனி எதிர்பார்த்த அந்த மொமண்டமை கீழே சரியவிடாமல் அப்படியே அம்பத்தி ராயுடு, ஜடேஜா போன்றவர்களுக்கு கைமாற்றிவிடும் வேலையை மொயீன் அலி சிறப்பாக செய்திருந்தார். மேலும், சரியாக 5 பௌலிங் ஆப்சன் மட்டுமே இருந்ததும் 2020 சீசனில் சிஎஸ்கேவின் சறுக்கலுக்கு காரணமாக அமைந்தது. 2021 இல் மொயீன் அலி அந்த பிரச்சனையையும் போக்கினார். ஆறாவது பௌலிங் ஆப்சனாக ஆஃப் ஸ்பின்னராக 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். எக்கானமி வெறும் 6.35 மட்டுமே. ஒரு ஆல்ரவுண்டராக சிஎஸ்கேவின் வலிமையை மொயீன் அலி பலமடங்கு அதிகரித்திருந்தார். அவர் ஒரு போட்டியில் ஆடாவிட்டாலும் பிரச்னைதான். மொயீன் அலிக்கு பதில் அந்த ஸ்லாட்டில் அப்படியே பொருந்திப் போகும் வீரர் சிஎஸ்கேவில் இல்லை. மிட்செல் சாண்ட்னர் ஆல்ரவுண்டர்தான். நன்றாக பேட்டிங்கும் ஆடுவார். ஆனால், ஏற்கனவே ஜடேஜா இடதுகை ஸ்பின்னராக இருப்பதால் இன்னொருவரும் இடது கை ஸ்பின்னராக இருப்பது சரியாக அமையாது. சிவம் துபேவை அந்த நம்பர் 3/4 இல் ஆட வைப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், அணியின் காம்பீனேஷனில் சில பிரச்னைகள் ஏற்படும். மொயீன் அலி இல்லாதபட்சத்தில் தோனி என்ன முடிவை எடுக்கப்போகிறார் என்பது சுவாரஸ்யமான விஷயமாக இருக்கும்.

அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, தீபக் சஹார் எல்லாமே நூறு சதவீதம் ப்ளேயிங் லெவனில் இருப்பார்கள். தீபக் சஹாருடன் கடந்த முறை ஷர்துல் தாகூர் அணியில் இருந்தார். இந்த முறை அவர் டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு சென்றுவிட்டார். அதனால் ஷர்துல் தாகூரின் இடத்தை நிரப்பக்கூடிய இந்திய வேகப்பந்து வீச்சாளரை தேர்ந்தெடுத்ததாக வேண்டும். கடந்த சீசன்களில் சிஎஸ்கேக்காக ஆடியிருக்கும் கே.எம்.ஆசிஃப், U19 கிரிக்கெட்டர் ராஜ்யவர்தன் ஹங்கர்கேக்கர், துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் இந்த இடத்திற்கான ரேஸில் இருக்கின்றனர்.

தீபக் சஹார் பவர்ப்ளேயில் சிறப்பாக வீசக்கூடியவர். இவருடன் கூட்டணி சேரும் வேகப்பந்து வீச்சாளர் மிடில் & டெத்தில் நன்றாக வீசக்கூடியவராக இருக்க வேண்டும். ஆனால், சிஎஸ்கேவுக்கு ஆப்சனாக இருக்கும் வீரர்கள் அனுபவமற்றவர்களாகவே இருக்கின்றனர். இதனால் ப்ராவோவும் ப்ளேயிங் லெவனில் இருப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

இதுபோக மொயீன் அலி ஆடவில்லை எனில் ஜடேஜாவோடு இணைந்து வீசப்போகும் ஸ்பின்னர் யார்? மற்றும் வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் யார் எனும் கேள்வியும் எழுகிறது. ஸ்பின்னர்கள் என பார்த்தால் இலங்கையின் இளம் வீரரான மஹீஸ் தீக்சனாவே முதலில் ஞாபகம் வருகிறார். இவர் தற்போதைய டிரெண்டான மிஸ்ட்ரி ஸ்பின்னை வீசக்கூடியவர். இரண்டு பக்கமும் பந்தைத் திருப்புவார். கடந்த ஆண்டுதான் சர்வதேச கிரிக்கெட்டிற்கு அறிமுகமானார். டி20 உலகக்கோப்பையில் இலங்கை அணிக்காகச் சிறப்பாக வீசியிருக்கிறார். பயங்கர சிக்கனமாக வீசக்கூடியவர். அற்புதமான தேர்வாக இருப்பார்.

வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்களும் அணிக்கு முக்கியமே. கடந்த சீசனில் ஹேசல்வுட் சிஎஸ்கேவிற்கு சிறப்பாக வீசி வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறார். இந்த முறை அந்த வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர் இடத்திற்கு ஆடம் மில்னே, ஜோர்டன், ப்ரெட்டோரியஸ் ஆகியோர் ரேஸில் இருக்கின்றனர். மில்னே அல்லது ஜோர்டன் டிக் அடிக்கப்பட அதிக வாய்ப்பிருக்கிறது.


உத்தேச அணி: (மொயீன் அலி இல்லாதபட்சத்தில்)

ருததுராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, உத்தப்பா, அம்பத்தி ராயுடு, தோனி, ஜடேஜா, ப்ராவோ, தீப்க் சஹார், மஹீஸ் தீக்சனா, ஆடம் மில்னே / ஜோர்டன், கே.எம்.ஆசிஃப் / துஷார் தேஷ்பாண்டே / ராஜ்யவர்த்தன் ஹங்கர்கேக்கர்.

மொயீன் அலி இல்லாதது மட்டுமே ப்ளேயிங் லெவன் தேர்வில் சிஎஸ்கேவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கும். அவருக்கு பதில் பேட்டிங் ஆடுவார் என்பதற்காக சிவம் துபே உள்ளே கொண்டு வரப்பட்டால் பௌலிங் கொஞ்சம் அடிவாங்க வாய்ப்பிருக்கிறது. தீபக் சஹரோடு இன்னொரு முழுநேர இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆட முடியாமல் போகும். ஜடேஜாவுடன் கூட்டணி போட்டு பந்துவீசும் மொயீன் அலியின் பந்துவீச்சை கணக்கில் கொண்டு மஹீஸ் தீக்சனாவை உள்ளே கொண்டு வந்தால் பேட்டிங்கில் ஒரு கை குறைவது போல இருக்கும். மொயீன் அலி இல்லாதபட்சத்தில் முதல் ஒன்றிரண்டு போட்டிகளில் சிஎஸ்கே இந்த பிரச்சனையை எதிர்கொண்டே தீரும். தோனி என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

சீக்கிரம் வந்துருங்க அலிபாய்!!

- உ. ஶ்ரீராம்