மேக்னஸ் கார்ல்சனும், இந்திய வீரர் பிரக்ஞானந்தாவும் மோதிக்கொண்ட செஸ் உலகக் கோப்பையின் முதல் சுற்றின் முதல் போட்டி டிராவில் முடிவடைந்திருக்கிறது.
FIDE செஸ் உலகக் கோப்பை போட்டிகள் அஜர்பைஜான் நாட்டின் பகுவில் நடைபெற்றுவருகிறது. உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்லசனும், நிஜத் அபசோவும் மோதிக்கொண்ட முதல் அரையிறுதிப் போட்டி கிளாசிக்கல் முறையில் நடைபெற்றது. முதல் சுற்றின் முதல் போட்டியில் ஒயிட்டில் விளையாடிய கார்லசன் அபசோவை வென்றார். அடுத்த போட்டி டிராவில் முடிய, நேரடியாக இறுதி 1.5-0.5 என்கிற கணக்கில் மேக்னஸ் கார்லசன் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.
அதே சமயம், இன்னொரு அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா , அமெரிக்கா வீரர் ஃபேபியானோ கருயானவை எதிர்கொண்டார். கிளாசிக்கல் சுற்றின் இரண்டு போட்டிகளும் டிராவாக, அடுத்தபடியாக ரேபிட் முறையில் போட்டிகள் நடைபெற்றன. அதன்படி 25'10" நேர அளவில் போட்டிகள் நடைபெற்றன. அதில் நடந்த இரண்டு போட்டிகளும் டிராவில் முடிய, போட்டி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. மூன்றாவது சுற்றுப் போட்டி ரேபிட் முறையில் 10'10" முறையில் நடைபெற்றது. மூன்றாவது சுற்றின் முதல் போட்டியில் பிரக் வென்று, அடுத்த சுற்றை டிரா செய்ய 3.5-2.5 கணக்கில் ஃபைனல் சுற்றுக்கு முன்னேறினார்.
இந்திய வீரர் ஒருவர் FIDE செஸ் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் விளையாடுவது இதுவே இரண்டாவது முறை . பிரக்ஞானந்தாவிற்கு பல பிரபலங்களிடமிருந்து வாழ்த்து மழை பொழிந்தது.
இன்று இறுதிப் போட்டியின் முதல் சுற்று நடந்தது. பிரக்ஞானந்தா ஒயிட்டில் விளையாடினார். கிளாசிக்கல் முறையில் நடைபெற்ற முதல் போட்டி 35 மூவ் நீடித்தது. ரூக் நைட் பான் எண்டிங் நோக்கி ஆட்டம் சென்றதால் இருவரும் டிராவிற்கு ஒப்புக்கொண்டனர். கிளாசிக்கல் சுற்றின் இரண்டாவது போட்டி நடைபெறும்.
மூன்றாவது இடத்துக்கு மற்றொரு போட்டியில் அரையிறுதியில் தோற்ற நிஜத் அபசோவும் , ஃபேபியானோ கருயானாவும் மோதிக்கொண்டனர். நிஜத் அபசோவ் அந்தப் போட்டியில் வெற்றி பெற்றார். இவர்களுக்கு இடையேயான அடுத்த போட்டியும் நாளை நடைபெறுகிறது. அதில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஃபேபியானோ கருயானா. முதல் மூன்று இடங்களைப் பெறும் வீரர்களே அடுத்து நடைபெறும் candidates தொடரில் விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.