மேக்னஸ் கார்ல்சனும் , பிரக்ஞானந்தாவும் மோதிக்கொண்ட கிளாசிக்கல் சுற்றின் முதல் போட்டி நேற்று டிராவானது. 35 மூவ் முடிவில் ரூக் நைட் பான் எண்டிங் நோக்கி போட்டி நகர்ந்ததால், இருவரும் டிரா என ஒப்புக்கொண்டனர்.
இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு கிளாசிக்கல் சுற்றின் இரண்டாவது போட்டி நடைபெறுகிறது. நேற்றைய போட்டியில் பிரக்ஞானந்தா ஒயிட்டிலும், மேக்னஸ் கார்ல்சன் பிளாக்கிலும் விளையாடியதால் , இன்று கார்ல்சன் ஒயிட்டில் விளையாடுவார்.
கிளாசிக்கல் சுற்று என்பதால், ஒவ்வொருக்கும் தலா 90 நிமிடங்கள் அளிக்கப்படும். ஒவ்வொரு மூவ்க்கும் கூடுதலாக 30 நொடிகள் வழங்கப்படும். 40 மூவ் கடந்த பின்னர், கூடுதலாக இருவருக்கும் 30 நிமிடங்கள் வழங்கப்படும்.
ஒரு வேளை இன்று நடக்கும் போட்டியும் டிரா எனில், நாளை டை பிரேக்கர் முறையில் போட்டிகள் நடைபெறும்.
டை பிரேக்கர் போட்டிகள் ரேபிட் செஸ் முறைப்படி நடக்கும். அதன்படி இரண்டு போட்டிகள் நடைபெறும். முதல் போட்டியில் பிரக்ஞானந்தா ஒயிட்டிலும், அடுத்த போட்டியில் மேக்னஸ் கார்ல்சன் ஒயிட்டிலும் விளையாடுவார்கள். ஒவ்வொருவரும் 25 நிமிடங்கள் அளிக்கப்படும். ஒவ்வொரு மூவ்க்கும் கூடுதலாக 10 நொடிகள் வழங்கப்படும்.
இந்தப் போட்டிகளும் டிரா எனில், அடுத்த சுற்று போட்டிகள் மீண்டும் ரேபிட் செஸ் முறைப்படி நடக்கும். இந்த முறை இன்னும் நேரம் குறைக்கப்பட்டு போட்டிகள் நடக்கும். மீண்டும் இரண்டு போட்டிகள் என்றாலும், ஒவ்வொருவருக்கும் பத்து நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்படும். ஒவ்வொரு மூவ்க்கும் கூடுதலாக 10 நொடிகள் வழங்கப்படும்.
இந்தப் போட்டிகளும் டிரா எனில், அடுத்த சுற்று போட்டிகள் ப்ளிட்ஸ் (Blitz) முறையில் நடைபெறும். இந்த முறை இன்னும் நேரம் குறைக்கப்பட்டு போட்டிகள் நடக்கும். மீண்டும் இரண்டு போட்டிகள் என்றாலும், ஒவ்வொருவருக்கும் ஐந்து நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்படும். ஒவ்வொரு மூவ்க்கும் கூடுதலாக 3 நொடிகள் வழங்கப்படும்.
அப்படி முடிவு இல்லையெனில், ப்ளிட்ஸ் முறையில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு போட்டி நடைபெறும். ஒவ்வொரு மூவ்க்கும் கூடுதலாக இரண்டு நொடிகள் வழங்கப்படும்.
பிரக்ஞானந்தாவுக்கும் ஃபேபியானோவுக்கும் இடையேயான அரையிறுதிப் போட்டி ஆறு போட்டிகள் வரை நீடித்தது . அதில் ஐந்தாவது போட்டியில் தான் பிரக்ஞானந்தா வென்றார். அதன்படி 3.5-2.5 என்கிற கணக்கில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார் பிரக்ஞானந்தா என்பது குறிப்பிடத்தக்கது.