விளையாட்டு

தோனியின் கைகளை கட்டிப்போட்ட சென்னை நிர்வாகம்

தோனியின் கைகளை கட்டிப்போட்ட சென்னை நிர்வாகம்

webteam

பைக்கில் சுற்றக்கூடாது என மகேந்திர சிங் தோனிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளதாக தெரிகிறது.

11வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் 2ஆண்டு தடைக்கு பின்னர் சென்னை அணி மீண்டும் களமிறங்கியுள்ளது. தோனியே மீண்டும் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முதல் போட்டியில் தோல்வியின் விளிம்பில் இருந்த அணியை பிராவோ தனி ஆளாக மீட்டு வெற்றி பாதைக்கு அழைத்துசென்றார். இதனையடுத்து சென்னை அணி விளையாடும் இரண்டாவது போட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. சென்னை அணி வீரர்கள் மும்பையுடனான போட்டி முடிந்ததும் சென்னை திரும்பினர். கொல்கத்தா வீரர்கள் நேற்று மாலை சென்னை வந்தடைந்தனர்.

இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. இதனால் வீரர்களுக்கு அணி நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதில் தோனியும் தப்பவில்லை. வீரர்களின் நலன் கருதி சென்னை அணி நிர்வாகம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தெரிகிறது.

தோனி ஒரு பைக் பிரியர். அவரிடம், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள, உயர் ரக பைக்குகள் ஏராளமாக உள்ளன. சென்னை வந்தால், அவர் ஜாலியாக பயணிப்பதற்காக இங்கும் பைக்குகளை வைத்துள்ளார். பொதுவாக பைக் பயணங்களின் போது எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் தனியாக செல்வார். இந்நிலையில் வீரர்களின் நலன் கருதி சென்னை அணி நிர்வாகம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பைக்கில் சுற்றக் கூடாது, வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டதாக தெரிகிறது.