விளையாட்டு

'உள்ளே போ' - மைதானத்தில் சண்டையிட்டதால் சொந்த அணி வீரரையே வெளியேற்றிய கேப்டன் ரஹானே.!

'உள்ளே போ' - மைதானத்தில் சண்டையிட்டதால் சொந்த அணி வீரரையே வெளியேற்றிய கேப்டன் ரஹானே.!

webteam

துலீப் கோப்பை இறுதிபோட்டியில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் தனது சொந்த அணி வீரரையே வெளியேற்றியுள்ளார் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே.

கோவையில் மேற்கு மற்றும் தெற்கு மண்டலங்கள் இடையே நடைபெற்று வரும் துலீப் டிராபி 2022 இறுதிப் போட்டியின் ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஃபார்வர்டு ஷார்ட் லெக்கில் பீல்டிங்க் செய்யும் போது தெற்கு மண்டல அணியின் பேட்டர் ரவி தேஜாவை மேற்கு மண்டல வீரர் ஜெய்ஸ்வால் வம்பிழுத்ததாக தெரிகிறது. இதனால் அம்பயர் அணியின் கேப்டன் ரஹானேவிடம் எச்சரித்ததை அடுத்து, ரஹானே ஜெய்ஸ்வாலிடம் சென்று சிறு உரையாடல் நிகழ்த்தினார். அதன் பிறகு அமைதியாக இருந்த ஜெய்ஸ்வால் மீண்டும் ரவி தேஜாவை வம்பிழுத்ததாக தெரிகிறது. இந்நிலையில் தனது சொந்த அணி வீரரை கேப்டன் ரஹானே மைதானத்தை விட்டு வெளியே செல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜெய்ஸ்வால் வெளியே சென்ற பிறகு, மேற்கு மண்டலத்திற்கு மாற்று பீல்டர் அனுமதிக்கப்படவில்லை. பின்னர், 20 வயதான ஜெய்ஸ்வால், ஏழு ஓவர்களுக்கு பிறகு மீண்டும் போட்டியில் பங்குபெற்றார். முன்னதாக அவர் இரட்டை சதம் (265 ரன்கள்) அடித்திருந்தார். மேலும் முதல் தர கிரிக்கெட் வரலாற்றில் 1000 ரன்களை எட்டிய இந்திய வீரர் ஆனார்.

முன்னதாக, ஜெய்ஸ்வால் ஒரு இண்டர்வியூவில், ரஹானேவின் அறிவுரைகள் அவருடைய நீண்ட இன்னிங்ஸை உருவாக்க எப்படி உதவியது என்று கூறியிருந்தார். அதில், ”அஜ்ஜு பாய் ஒருமுறை என்னிடம் நீண்ட இன்னிங்ஸ் விளையாட, சிறிய இலக்குகளுடன் தொடங்குங்கள் என்று கூறினார். தலா ஐந்து ரன்களை இலக்காக வைத்துக் கொள்ளுங்கள், எதையும் அவசரமாக விளையாடாதீர்கள், மிக முக்கியமாக, களத்தில் நீண்ட நேரம் இருங்கள். ஒரு பெரிய போரில் வெற்றி பெற நாம் கிரீஸில் இருக்க வேண்டும், அப்போது தானாக ரன்கள் வரும். ஒரு நல்ல பந்து உங்கள் விக்கெட்டைப் பறிக்கக்கூடும், ஆனால் நீங்கள் அதற்கு எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் நிலைத்து ஆடுவீர்கள், ”என்று கூறினார்.