ரஷ்யாவில் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போது நாக் அவுட் சுற்றுகள் முடிந்து நாளை முதல் காலிறுதிப் போட்டிகள் தொடங்குகிறது. இதில் பிரேசில் அணி ரெட் டெவில்ஸ் என்று அழைக்கப்படும் பெல்ஜியத்துடன் மோதுகிறது.
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கடந்த சில நாட்களாக விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார். பிரேசில் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோவுடன் மோதியது. இதில் அந்த அணி 2-0 என்ற கோல் கணக்கி்ல் வெற்றிப்பெற்றது. ஆனால் அந்தப் போட்டியில் மெக்சிகோ வீரர் தள்ளி விட்டதில் கீழே விழுந்து கால்களை பிடித்துக் கொண்டு துடிதுடித்தார். ஆனால் நெய்மர் அளவுக்கு மீறி நடிப்பதாக பலரும் நக்கலடித்து வருகின்றனர்.
நெய்மர் ஒரு பித்தலாட்டக்காரர் என மெக்சிகோ அணியின் பயிற்சியாளர் கூட கூறியிருந்தார். இந்நிலையில் நெய்மர் உருண்டு புரண்டு துடிக்கும் காட்சிகளை வைத்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் மீம்கள் உருவாக்கப்பட்டு நக்கலடிக்கப்பட்டார். இந்த மீம்ஸ்கள் உலகளவில் டிரண்டானது. நெய்மரின் நடிப்புக்கு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் என கலாய்க்கப்பட்டார்.
இதுபோன்ற விமர்சனங்கள் குறித்து பிரேசில் அணியின் முன்னாள் வீரர் ரொனால்டோ, நெய்மருக்கு ஆதராவாக கருத்துகளை முன்வைத்துள்ளார். அதில் "நெய்மர் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் மீது எனக்கு உடன்பாடில்லை. நெய்மர் மிகவும் திறமைவாய்ந்த வீரர். கால்பந்தாட்ட ஆடுகளத்தில் இருக்கும் நடுவர்கள் நெய்மருக்கு போதிய பாதுகாப்பை அளிக்கவில்லை. நெய்மரை குறி வைத்து எதிர் அணி வீரர்கள் அவரை தாக்குகின்றனர்" என பகிரங்கமாத குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் அவர் ஊடகங்கள் குறித்து பேசிய ரொனால்டோ "பத்திரிக்கைகள் தங்கள் பக்கங்களை நிரப்பவே நெய்மரை இப்படி சித்தரித்து எழுதுகிறார்கள். இது மிகவும் மட்டமான செயல்" என்றார்.