விளையாட்டு

சேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தமிழக முதல்வர் திறந்து வைத்தார் !

சேலத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்: தமிழக முதல்வர் திறந்து வைத்தார் !

jagadeesh

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் மட்டுமே சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போது, சேலம் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் வழிகாட்டுதலின்படி சேலம் கிரிக்கெட் ஃபவுண்டேஷன் சார்பில், சேலத்தில் தற்போது சர்வதேச தரத்திலான மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட குழுவினரின் கூட்டு முயற்சியால் சர்வதேச தரத்தில் மைதானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சேலம் வாழப்பாடியை அடுத்த காட்டுவேப்பிலைப்பட்டியில், சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 500 மீட்டர் தூரத்தில், இயற்கை எழில்கொஞ்சும் மலையடிவார சூழலில் இந்த கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. இந்த கிரிக்கெட் மைதானம் உருவாக்கும் பணி 2017 இல் தொடங்கியது. இந்த கிரிக்கெட் மைதானம், 2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் ஐந்து பிட்ச்சுகளை உள்ளடக்கியுள்ளது.

இந்த மைதானத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். அமைச்சர்கள் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அத்துடன், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட், சீனிவாசன், ரூபா குருநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மைதானத்தை திறந்து வைத்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, " இந்த அரசு கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை விளையாட்டுக்கும் அளித்து வருகிறது. இதன் மூலம் தேசிய, சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்கி வருகிறது. அதற்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. இந்த மைதானத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்கு அரசு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளது" என்றார் அவர்.