விளையாட்டு

பேட்ஸ்மேன்களை வேட்டையாடும் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள்

பேட்ஸ்மேன்களை வேட்டையாடும் ஐதராபாத் பந்துவீச்சாளர்கள்

rajakannan

11வது ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். 

இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிதான் எல்லா வகையிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. சென்னை அணிக்கு எப்படி இருந்தாலும் இரண்டாம் இடம் தான். வெற்றியை வைத்து மட்டும் இதனை கூறிவிட முடியாது. ஏனெனில் அவர்கள் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லா துறையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பவுலிங். 

வழக்கமாக ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடிக்கும் அணிகள்தான் எளிதில் வெற்றி பெறும். 180 ரன்களுக்குள் எடுத்தால் எளிதில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகள் சேஸ் செய்துவிடும். சில போட்டிகள்தான் குறைவான ரன்கள் எடுத்த போதும் போராடி வெற்றியை எட்டும். ஆனால், சன்ரைசர்ஸ் அணியோ இந்தத் தொடரில் பெரும்பாலும் குறைவான ரன்களை எடுத்தும், எதிரணியை அந்த ரன்களுக்குள் கட்டுப்படுத்தி வெற்றிக் கனியை எட்டிப் பிடித்துவிடுகிறது. குறிப்பாக மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிராக 118 ரன்கள் மட்டுமே சன்ரைசர்ஸ் அணி எடுத்தது. ஆனால், மும்பை அணியை வெறும் 87 ரன்களுக்கு சுருட்டியது. 

மும்பை அணி - 118
பஞ்சாப் - 132
ராஜஸ்தான் - 151
பெங்களூர் - 146

150 ரன்களுக்குள் எடுத்தும் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் பந்துவீச்சாளர்களே. ரஷித் கான், சித்தார்த் கவுல்,  புவனேஸ்வர் குமார் உள்ளிட்டோர் சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்துவதோடு, ரன்களையும் வழங்காமல் கட்டுக் கோப்புடன் பந்து வீசுகிறார்கள். திடீரென எதிரணியின் விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை மாற்றிவிடுகிறார்கள்.

குறிப்பாக, நேற்றைய போட்டியில், 7 ஓவர்கள் முடிவில் 60 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்து பெங்களூரு அணி மிகவும் வலுவாக இருந்தது. ஏனெனில் மீதமுள்ள 13 ஓவர்களில் அந்த அணி 87 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது. களத்தில் கேப்டன் விராட் கோலியும், பார்த்தீவ் பட்டேலும் இருந்தனர். ஆனால், அடுத்த 24 ரன்கள் சேர்ப்பதற்குள் பெங்களூர் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பிறகும் பெங்களூர் அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தது. ஆனால், சன்ரைசர்ஸ் வீரர்கள் சிறப்பாக பந்துவீசி ரன் சேர்ப்பை கட்டுப்படுத்தினர். கடைசி கட்டத்தில் புவனேஸ்வர் குமார் அற்புதாக பந்து வீசி வெற்றியை உறுதி செய்தார். 

இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் ரஷின் கான், கவுல் தலா 13 விக்கெட்டுகள் வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளனர்.  பந்து வீச்சாளர்கள் மட்டுமில்லாமல், கேப்டன் வில்லியம்சன் பங்களிப்பும் இந்த தொடரில் ஐதராபாத் அணிக்கு முக்கியமாக அமைந்து வருகிறது.