உள்ளூர் போட்டி ஒன்றில் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ஒருமுறை அவுட்டாக்கியதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஷ்வர் குமார். உள்நாட்டிலும் சரி வெளிநாட்டிலும் சரி பந்தை ஸ்விங் செய்வதில் திறமை பெற்றவர் புவனேஷ்வர் குமார். அண்மையில் "கிரிக்பஸ்" இணையதளத்துக்கு பேட்டியளித்த புவனேஷ்வர் குமார், ரஞ்சிப் போட்டியில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை அவுட்டாக்கியது குறித்து மெய் சிலிர்த்து பேசியுள்ளார்.
2008 - 2009 ஆம் ஆண்டு மும்பை - உத்தரப்பிரதேசம் அணிகளுக்கு இடையே ரஞ்சிப் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சச்சின் டெண்டுல்கரை முதல் பந்திலேயே டக் அவுட்டாக்கி வெளியேற்றினார். அன்றையப் போட்டி குறித்து புவனேஷ்வர் குமார் மனம் திறந்து பேசியுள்ளார் அதில் "டெரஸ்ஸிங் ரூமில் இருந்து சச்சின் பிட்சுக்கு நடுவே பேட் செய்ய வந்தார், அப்போது நான் பவுலிங் செய்வதற்காக எதிர் திசையில் நின்று அவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தேன்".
மேலும் தொடர்ந்த அவர் "நான் வீசிய முதல் பந்தை "டிஃபென்ட்" செய்த சச்சின் கேட்ச் கொடுத்து ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அப்போது நான் ஒரு பேட்ஸ்மேனை அவுட் செய்துவிட்டதாக மட்டுமே எண்ணினேன். பின்பு கிரவுண்டை விட்டு வெளியேறிய பின்புதான் உணர்ந்தேன், நான் அவுட்டாக்கியது சச்சின் டெண்டுல்கரை. நான் சச்சினை அவுட்டாக்கியது குறித்து நாளிதழ்களில் செய்தியாக வெளியாகின. அப்போதுதான் நான் பெரிதாக சாதித்ததை உணர்ந்தேன். அப்போதிருந்து என் கிரிக்கெட் வாழ்க்கையும் மாறியது" என நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார் புவனேஷ்வர் குமார்.