விளையாட்டு

வெற்றி பறிபோனதால் தேம்பித்தேம்பி அழுத சிறுவன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த வீரர்கள்

வெற்றி பறிபோனதால் தேம்பித்தேம்பி அழுத சிறுவன் - இன்ப அதிர்ச்சி கொடுத்த வீரர்கள்

rajakannan

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனதால் மனமுடைந்து அழுத சிறுவனுக்கு இருநாட்டு வீரர்களும் இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன. இதனிடையே, ஆப்கானிஸ்தான் - இந்தியா இடையேயான போட்டியின் போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பாகிஸ்தானை எளிதில் வென்று ஊதித் தள்ளிய இந்திய அணி, ஆப்கானுக்கு எதிரான போட்டியில் போராடி டிரா மட்டுமே செய்தது. இது இந்திய ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வரும் ஆப்கான் அணி இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து வெற்றியை தடுத்துவிட்டது. 

இதனால், இந்திய அணி வெற்றி பெற முடியாமல் போனதால் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் முகம் சோகத்தில் ஆழ்ந்தது. போட்டி டை ஆன மகிழ்ச்சியில் ஆப்கான் ரசிகர்கள் உற்சாகத்தில் திளைத்தனர். மைதானத்தில் போட்டியை காண வந்திருந்த இந்திய சிறுவன் ஒருவன் மேட்ச் டை ஆனதால் தேம்பித்தேம்பி அழுதிருக்கிறான். இந்திய அணியின் ஜெர்ஸி அணிந்திருந்த சிறுவனை அவனது தந்தை எவ்வளவு தேற்றியும் அவனால் அழுவதை கட்டுப்படுத்த முடியவில்லை.

சிறுவன் அழுது கொண்டிருந்தது டிவியில் ஒளிபரப்பானது. இதனை பார்த்த ஹர்பஜன் சிங், அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். “அழாதே குழந்தை, இறுதிப் போட்டியில் வென்று விடலாம்” என்றும் குறிப்பிட்டிருந்தார். ஹர்பஜன் பதிவிட்ட அந்த போட்டோ ட்விட்டரிலும் வைரல் ஆனது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பார்த்த சிறுவனின் தந்தை அமர்ப்ரீட் சிங், தனது மகனுக்கு ஆதரவு அளித்ததற்கு நன்றி என பதில் ட்வீட் செய்திருந்தார். 

அத்தோடு, அமர்ப்ரீட் சிங் ட்விட்டர் பக்கத்தில் மற்றொரு சுவரஸ்யமான தகவலை பதிவிட்டுள்ளார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அந்தச் சிறுவனுக்கு போன் செய்து பேசியதாக கூறியுள்ளார். அந்தச் சிறுவன் போன் பேசுவது போல் வீடியோவும் உள்ளது.

இத்தோடு அந்தச் சிறுவனின் சிறப்பான தினம் முடிந்துவிடவில்லை. ஆப்கானிஸ்தான் வீரர்கள் ரஷித் கான் மற்றும் முகமது ஷாஜத் இருவரும் அந்தச் சிறுவனுடன் சேர்ந்து போட்டோவும் எடுத்துள்ளனர்.

அந்த போட்டோவும் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.