இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். இவரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டர் சாமுவேல்ஸும் அடிக்கடி மைதானத்தில் மோதிக்கொள்வது வழக்கம்.
2015-ல் வெஸ்ட் இண்டீஸில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டோக்ஸ் அவுட் ஆகி வெளியேறும்போது, மைதானத்தில் இருந்த சாமுவேல்ஸ் ஸ்டைலாக அவருக்கு ஒரு சல்யூட் அடித்தார். அப்போது ஆரம்பித்தது பிரச்னை. இருவரும் முறைத்துக் கொண்டார்கள். திட்டிக்கொண்டார்கள். பிறகு, டி20 உலகக் கோப்பை போட்டியின் போது கொல்கத்தா மைதானத்தில் தொடர்ந்தது இவர்களின் பிரச்னை. இவர்கள் முட்டல் மோதலை ரசிகர்களும் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
இன்று நடக்கும் வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் போட்டியிலும் இவர்கள் மோதல் தொடரலாம் என தெரிகிறது.
இதுபற்றி வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டரிடம் கேட்டபோது, ’சாமுவேல்ஸ் போராட்டக்குணமுள்ள வீரர். போட்டியை ஊக்குவிக்கும் வகையில் மைதானத்துக்குள் அவர் எதை செய்தாலும் அதை வரவேற்கிறேன். அதைத் தாண்டி வேறு ஒன்றுமில்லை. ஸ்டோக்ஸ்- சாமுவேல்ஸ் விஷயத்தில் ரசிகர்களுக்கு ஆர்வம் இருக்கும் என்பதை புரிந்துகொள்கிறேன். அவர்கள் இதை விரும்புவார்கள். இருவரும் பிரச்னையில் இருந்து வெளியில் இருக்க நாங்கள் உதவுவோம்’ என்றார்.