இன்ஸ்டாகிராமில் 13 மில்லியன் பின் தொடர்பவர்கள் (ஃபாலோவெர்கள்) வந்ததை கொண்டாடும் வகையில் பிசிசிஐ வெளியிட்ட புகைப்படத்தில் தோனிக்கு இடமளிக்கப்படவில்லை.
பிசிசிஐ-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்பற்றுவோரின் எண்ணிக்கை 13 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் ஒருபுகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பிசிசிஐ பகிர்ந்துள்ளது. படத்துடன் 13 மில்லியன் பேர் கொண்ட வலிமையான குடும்பம் இது, உங்கள் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என தெரிவித்துள்ளது.
தற்போது பிசிசிஐ பகிர்ந்த அந்த புகைப்படத்தை தோனி ரசிகர்கள் விமர்சித்தும், எதிர்த்தும் வருகின்றனர். ஏனென்றால் பிசிசிஐ சார்பில் வெளியிடப்பட்ட அந்த போட்டோவில் இந்திய கேப்டன் விராட் கோலி, ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மட்டுமே ஆண்கள் அணி சார்பில் இடம்பெற்றுள்ளனர். மேலும் மகளிர் அணி சார்பில் ஹர்மன்ப்ரீத் காவுர், ஸ்மிரிதி மந்தனா மற்றும் பூனம் யாதவ் ஆகியோர் உள்ளனர்.
அந்தப் புகைப்படத்தில் தோனிக்கு இடமளிக்கப்படவில்லை. இதனால் தோனி ரசிகர்கள் பிசிசிஐ நிர்வாகத்திற்கு எதிராக கமெண்ட் செய்துள்ளனர். இந்திய அணி தற்போது இருக்கும் நிலைக்கு முக்கிய காரணம் தோனி தான் எனவும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். தோனி புகைப்படத்தை சேர்க்காத பிசிசிஐ பக்கத்தை இனி பின்பற்றப்போவதில்லை எனவும் சிலர் வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இறுதியாக உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடினார். அதன்பின்னர் இன்னும் அவர் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. முன்னதாக பிசிசிஐ வெளியிட்ட நடப்பு ஆண்டுக்கான கிரிக்கெட் வீரர்கள் ஒப்பந்த பட்டியலிலும் தோனி பெயர் இல்லை. இது தோனி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. கொரோனா வைரஸால் தோனி விளையாட இருந்த ஐபிஎல் போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.