ஐபிஎல் போட்டிகளை இந்தாண்டு எப்போது நடத்துவது என்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததையடுத்து மார்ச் 29ஆம் தேதி நடைபெறவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்பு, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் ஐபிஎல் போட்டிகள் செப்டம்பரில் நடத்தப்படலாம், வெளிநாடுகளில் நடக்கலாம் என்ற செய்திகள் வெளியாகின.
இதனையடுத்து ஐபிஎல் போட்டியை தங்கள் நாட்டில் நடத்தலாம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியமும், ஐக்கிய அரபு அமீரகமும் பிசிசிஐ-க்கு கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து கடந்த மாதம் பேசிய பிசிசிஐ பொருளாளர் அருண் துமால் "ஐபிஎல் போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகம் கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் சர்வதேச அளவில் எங்கும் பயணம் செய்ய முடியாது" என்றார். அதேசமயம் நியூசிலாந்தும் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐயிடம் விருப்பம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை பிசிசிஐ நடத்தவுள்ளதாக நேற்று முதல் செய்திகள் வெளியாகி வந்தன.
இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பிசிசிஐ நிர்வாகி ஒருவர் "இப்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இப்போதுள்ள சூழ்நிலையை கவனித்து வருகிறோம். ஐபிஎல் நடத்துவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான அனைத்து சாத்தியங்களையும் ஆராய்ந்து வருகிறோம். ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சில நாடுகள் போட்டியை நடத்த கேட்டுள்ளன. இதுதொடர்பாக அரசாங்கத்திடமும் பேசவுள்ளோம்" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர் "பிசிசிஐ எது செய்தாலும் நாட்டின் நலனுக்காகவும் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்காகவும் இருக்கும். அதனால் இப்போதைக்கு அது ஐபிஎல் நடத்துவது குறித்து ஊடகங்கள் வெளியிடும் செய்தியில் உண்மையில்லை. ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டத்தில் பேசிய பின்பே முடிவெடுக்கப்படும்" என்றார்.