விளையாட்டு

இஷாந்தை முந்தி ஐபிஎல்-லில் சாதனை: தாராள தம்பியான பசில் தம்பி!

இஷாந்தை முந்தி ஐபிஎல்-லில் சாதனை: தாராள தம்பியான பசில் தம்பி!

webteam

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில், அதிக ரன்களை வாரி வழங்கிய தாராள பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஐதராபாத் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பசில் தம்பி பெற்றுள்ளார். 

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 51-வது லீக் போட்டியில் சன்ரைசர் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அதன்படி பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் டிவில்லியர்ஸும் மொயின் அலியும் ஐதராபாத் பந்துவீச்சை சிதறடித்தனர். போட்டி நடந்த சின்னசாமி மைதானம் சிறியது என்பதால் பந்துகள் பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறந்தன. 

டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 69 ரன்களும், மொயின் அலி 34 ரன்களில் 65 ரன்களும் எடுத்து அவுட் ஆயினர். கடைசியில் கிராண்ட்ஹோம் 17 பந்துகளில் 40 ரன்கள் விளாசினார். 
பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஐதராபாத் அணியால் 20 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் 81 ரன்களும் மனீஷ் பாண்டே 68 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி. 

இந்தப் போட்டியில் முதலில் பந்து வீசிய ஐதராபாத் அணியில், புவனேஷ்வர்குமாருக்குப் பதிலாக பசில் தம்பி சேர்க்கப்பட்டிருந்தார். அவரது பந்தை டிவில்லியர்ஸும் மொயின் அலியும் பிரித்து மேய்ந்தனர். சிக்சரும் பவுண்டரியுமாக அவர் பந்தில் பறந்தன. அவர்கள் அவுட் ஆனதும் கிராண்ட்ஹோமும் விட்டுவைக்கவில்லை. அவரும் தம்பி பந்தை விளாசித் தள்ளினார்.

இதையடுத்து 4 ஓவர்கள் வீசி விக்கெட் எடுக்காமல் 70 ரன்களை வாரி வழங்கினார் பசில் தம்பி. அவரது முதல் ஒவரில், 19 ரன்கள், 2 ஓவரில் 18 ரன்கள், 3 வது ஓவரில் 14, 4 வது ஓவரில் 19 ரன்களை விட்டுக்கொடுத்தார். ஐபிஎல் தொடரில் ஒரு பந்துவீச்சாளரின் மோசமான பந்துவீச்சு இது. இதற்கு முன் ஐதராபாத் அணிக்காக ஆடிய இஷாந்த் சர்மா, 2013-ம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 66 ரன்களை விட்டுக்கொடுத்ததே சாதனையாக இருந்தது. அதை முந்தியிருக்கிறார், இந்த எர்ணாகுளத்துத் தம்பி.

இவர்களை அடுத்து உமேஷ் யாதவ் (66), சந்தீப் சர்மா (65), வருண் ஆரோன் (63) ரன்களை விட்டுக்கொடுத்துள்ளனர்.