ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக டெல்லி கேபிட்டல்ஸ் அணி 196 ரன்களை குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டி டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் இடையே துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருஅணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தொடங்கியது.
அந்த அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிருத்வி ஷா மற்றும் ஷிகர் தாவன் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். அதிரடியாக ஆடிய பிருத்வி 23 பந்துகளில் 42 ரன்களை எடுத்துவிட்டு ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து 28 பந்துகளில் 32 ரன்களை எடுத்திருந்த ஷிகர் தவானும் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பிறகு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் 11 (13) ரன்களில் அவுட் ஆக, டெல்லி அணி நெருக்கடியில் சிக்குமோ எனத் தோன்றியது.
ஆனால், அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ரிஷாப் பண்ட் மற்றும் மார்கஸ் ஸ்டொயினிஸ் அருமையான பார்ட்னர்ஷிப்பை கொடுத்தனர். இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். முகமது சிராஜ் வீசிய பந்தில், 25 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரிஷாப் பண்ட் போல்ட் அவுட் ஆனார். மறுபுறம் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய மார்கஸ் ஸ்டொயினிஸ் 24 பந்துகளில் அரை சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் முகமத் சிராஜ் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.