சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று இந்திய வீரர் அவினாஷ் சேபிள் அசத்தியுள்ளார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் தனது வியூகத்தை சரியாக செயல்படுத்திய அவினாஷ், சக போட்டியாளர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி வேகமெடுக்கத் தொடங்கினார். கடைசி 60-70 மீட்டரின் போதெல்லாம் அவினாஷை நெருங்க கூட முடியாமல் பிரேமிலேயே இல்லாமல் இருந்தனர் சக போட்டியாளர்கள். பின்னர் 8:19.50 வினாடிகளில் பந்தயத்தை முடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார் தங்கமகன் அவினாஷ்.
ஒரு ஆடவர் இந்திய வீரர் ஸ்டீபிள் சேஸில் பெறும் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும். இந்த சாதனையை அவினாஷ் சேபிள் 29 வயதில் செய்துள்ளார். சுதா சிங் தங்கப் பதக்கம் வென்று 13 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு தற்போது அவினாஷும் தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.
2010 ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் தங்கம் வென்றிருந்தார் இந்திய வீராங்கனை சுதா சிங்.
3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸை அவினாஷ் 8:19.50 வினாடிகளில் முடித்ததன் மூலம் முந்தைய ஆசிய விளையாட்டு சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னர் 2018 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஈரானின் ஹொசைன் கெய்ஹானி 8:22.79 வினாடிகளில் கடந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார் இந்திய வீரர் அவினாஷ் சேபிள்.
3000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பிறகும் திருப்தியடையாத அவினாஷ், 5000 மீட்டர் ஸ்டீபிள் சேஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வெல்வேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இன்றைய ஆசிய விளையாட்டு போட்டியில் மட்டும் ஒரே நாளில் இந்திய அணி 15 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. இதற்கு முன்னதாக 2010 ஆசிய விளையாட்டு போட்டிகளில் ஒரே நாளில் 11 பதக்கங்கள் பெற்றதே இந்தியாவின் அதிகபட்ச பதக்கங்களாக இருந்தது. தற்போது அதை உடைத்து தன்னுடைய சிறந்த பதக்க வேட்டையை பதிவு செய்துள்ளது இந்தியா.