Mitchell Starc  ICC Twitter
விளையாட்டு

‘ஐபிஎல் போட்டியில் விளையாடுவதை விட.. எனக்கு இதுதான் விருப்பம்..’ - ஓபனாக பேசிய மிட்சல் ஸ்டார்க்!

“ஐபிஎல் தொடர்களில் பங்கேற்பதனால் கிடைக்கும் பணத்தை விட, நாட்டுக்காக, குறிப்பாக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று ஆஸ்திரேலிய இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

சங்கீதா

மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்க, உள்ளூர் வீரர்களைப் போன்று வெளிநாட்டு வீரர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பணம் கொழிக்கும் தொடராக இருப்பது மட்டுமின்றி, பல வீரர்களுக்கு திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவும் அது அமைந்திருப்பது இதற்கு ஒரு காரணம். இந்நிலையில், சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காகவே, ஐபிஎல் தொடர்களை தவிர்ப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்து ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் ரோகித் தலைமையிலான இந்திய அணியும், பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆஸ்திரேலிய அணியில் 15 பேர் கொண்ட பட்டியலில் மிட்சல் ஸ்டார்க்கும் இடம் பிடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மிட்சல் ஸ்டார்க் கிரிக்கெட்.காம் என்ற ஆஸ்திரேலிய இணையதளத்துக்கு அளித்துள்ளப் பேட்டியில், “ஆஸ்திரேலிய அணிக்காக நீண்டகாலம் விளையாடுவதற்காக, புத்திசாலித்தனமாக யோசித்து சில விஷயங்களை செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆமாம், ஐபிஎல்லில் விளையாடுவதால் நிறைய பணம் கிடைக்கிறது. ஆனால், நான் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாட விரும்புகிறேன். அத்தனைப் போட்டிகள் என்னால் விளையாட முடியுமா, முடியாதா என்பதை தாண்டி செய்வதற்கு எனக்குள் ஏதாவது மீதம் இருக்கும் என்று நம்புகிறேன். தேசிய அணிக்காக விளையாடுவதை தேர்ந்தெடுப்பதுதான் நன்றாக இருக்கும்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக மூன்று வடிவ போட்டிகளிலும் விளையாடுவது மிகவும் கடினமான ஒன்றாகதான் இருந்தது. ஆனால், நான் இவ்வளவு தூரம் வந்ததற்கு அதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எனது பந்துவீச்சில் நான் வேகத்தை இழந்தவுடன், எனது இடத்தை நிரப்ப ஒருவர் வருவார். அடுத்த இடது கை வேகப் பந்துவீச்சாளர் வந்ததும், எனது இடம் காலியாகும் என்று எனக்கு தெரியும். ஊடகங்கள் விமர்சனம் என்ற பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை என்னைத் தொந்தரவு செய்திருக்கலாம். ஆனால், அவர்கள் என்னைத் தொந்தரவு செய்ய முடியாத மகிழ்ச்சியான இடத்தில் தற்போது நான் இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Mitchell Starc, RCB

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கடந்த 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் விளையாடியுள்ளார். இந்த இரண்டு சீசன்களிலும், மொத்தம் 27 போட்டிகளில் விளையாடிய அவர், 34 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். கடந்த 2018 ஐபிஎல் தொடரின்போது கொல்கத்தா அணிக்காக ரூ. 9.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க், அந்த சீசனில் ஒரு போட்டியில் கூட களமிறங்கவில்லை. அதன்பிறகு சர்வதேசப் போட்டிகளுக்காக ஐபிஎல் தொடரை அவர் தவிர்த்து வருகிறார்.

33 வயதான மிட்சல் ஸ்டார்க், 77 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 306 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும், கடந்த 2015-ம் ஆண்டு ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் கடந்த 2021-ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த மிட்சல் ஸ்டார்க், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் இடம்பிடித்துள்ளார். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெல்லும் பட்சத்தில், ஐசிசியின் அனைத்து விதமான உலகக் கோப்பைகளையும் வென்ற வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார் ஸ்டார்க்.

இவரைப்போலவே ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரும் சாதனைக்கு சொந்தக்காரர்கள் ஆவார்கள். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்த ஜோஷ் ஹேசல்வுட் காயம் காரணமாக கடைசி நேரத்தில் விலகியுள்ளதால் இதனை தவறவிடுவார் என்று கூறலாம்.