இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, 5 விக்கெட்டுக்கு 534 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கான்பெராவில் நேற்று தொடங்கியது. இந்த மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடப்பது இதுவே முதல் முறை.
முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்திருந்தது. அந்த அணியில் டிராவிஸ் ஹெட் 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருக்கு இது முதல் சதம். தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் 172 ரன்களுடனும் குர்டிஸ் பேட்டர்சன் 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். பர்ன்ஸ்- டிராவிஸ் ஹெட் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 308 ரன்கள் சேர்த்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த பர்ன்ஸ் 180 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஞ்சிதா பந்துவீச்சில் போல்டானார். பின்னர் கேப்டன் பெய்ன் வந்தார். இருவரும் இணைந்து நிதானமாக ஆடினார். அணியின் ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 534 ரன்கள் ஆக இருந்தது.போது, டிக்ளேர் செய்யப்பட்டது. சிறப்பாக ஆடிய குர்திஸ் பேட்டர்சன் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அவர் 114 ரன்களும், ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் 45 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய வீரர்கள் 3 பேர் சதம் அடித்துள்ளனர். இலங்கை அணி தரப்பில், விஷ்வா பெர்னாண்டோ 3 விக்கெட்டும், கருணாரத்னே, ரஞ்சிதா தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. திமுத் கருணாரத்னேவும் திரிமன்னேவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி ஆடி வருகின்றனர்.