ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இந்தப் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டிருந்ததாகவும் அந்நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் பிரச்னைகளால் போட்டியை அங்கு நடத்த இயலாத நிலை இருப்பதாகவும் மும்பையில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் வாரியமும் தாங்கள் இந்த போட்டியை நடத்த இயலாத சூழலில் இருப்பதாக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் தெரிவித்தது.
இதையடுத்து இலங்கைக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை 20 ஓவர் போட்டிகளாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை உள்பட 6 அணிகள் இத்தொடரில் பங்கேற்க உள்ளன.