விளையாட்டு

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர்: இலங்கையில் இருந்து வேறு நாட்டிற்கு மாற்றம்?

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர்: இலங்கையில் இருந்து வேறு நாட்டிற்கு மாற்றம்?

JustinDurai

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கையில் இருந்து வேறு நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்தப் போட்டியில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச் சுற்றில் தெரிவு செய்யப்படும் இரண்டு அணிகள் என மொத்தமாக ஆறு அணிகள் பங்கேற்கும். இதனிடையே கொரோனா பரவல் மற்றும் அதன் கட்டுப்பாடுகள் காரணமாக 2020 ஆம் ஆண்டு போட்டியை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ரத்து செய்திருந்தது. 2022ஆம் ஆண்டுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை இலங்கையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பம் காரணமாக  ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியை இலங்கையில் இருந்து வேறு நாட்டில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதால், அந்நாடு முழுவதும் 10 மணி நேர மின் வெட்டு அமலில் உள்ளது. இந்த சூழலில் அங்கு தொடர் நடத்துவது சரியானதாக இருக்காது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கருதுவதாக கூறப்படுகிறது.  எனவே ஆசியக் கோப்பை போட்டி இலங்கையில் இருந்து வேறு நாட்டில் நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.   

ஆசியக் கோப்பை வரலாற்றில் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இந்தியா உள்ளது. 1984இல் தொடங்கப்பட்டதிலிருந்து, இந்தியா ஏழு முறை பட்டத்தை வென்றுள்ளது. ஐந்து பட்டங்களை வென்ற இலங்கை இரண்டாவது இடத்தில் உள்ளது. கடைசியாக 2018 இல் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாம்: ஜடேஜாவுக்கு பதிலாக இவரை சென்னை கேப்டனாக ஆக்கியிருக்கணும் - யாரை சொல்கிறார் ரவி சாஸ்திரி?