விளையாட்டு

அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்த ஹர்திக் பாண்ட்யா; பாகிஸ்தான் தடுமாற்றம்

அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை சாய்த்த ஹர்திக் பாண்ட்யா; பாகிஸ்தான் தடுமாற்றம்

ச. முத்துகிருஷ்ணன்

20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி விரைவிலேயே முதல் விக்கெட்டை இழந்தது. அதுவும் கேப்டன் பாபர் அசாம் விக்கெட்டை. புவனேஷ்குமார் வீசிய மூன்றாவது ஓவரில் பாபர் ஹசாம் விக்கெட்டை வீழ்த்தினார். 4 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 23 ரன்கள் எடுத்தது. ரன்களை வாரி வழங்கினாலும் பக்கர் ஸமான் விக்கெட்டை வீழ்த்தினார் ஆவேஷ்கான். பாகிஸ்தான் அணி 7 ஓவர்கள் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.

இரண்டு விக்கெட் வீழ்ந்த நிலையில் நிதான ஆட்டத்தை கையிலெடுத்தது பாகிஸ்தான். முகமது ரிஸ்வான் மற்றும் இஃப்டிகார் அகமது ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தது. விக்கெட் வீழ்ச்சியை தடுக்க தடுப்பாட்டம் ஆடினர். இந்நிலையில்தான் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா தனது மேஜிக்கை நிகழ்த்தினார். 

13வது ஓவரின் முதல் பந்தில் 28 ரன்கள் எடுத்திருந்த அகமது விக்கெட்டை சாய்த்தார். பின்னர், அவர் வீசிய 15வது ஓவரில் பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் மற்றும் மூன்றாவது பந்துகளில் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தார் ஹர்திக். 14.3 ஓவரில் 97 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது பாகிஸ்தான் அணி. 17வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் தன் பங்கிற்கு அசிப் அலி விக்கெட்டை வீழ்த்தினார். 17 ஓவரில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிகு 114 ரன்கள் எடுத்தது.

எதிர்பார்ப்பின் உச்சத்தில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி:

கடந்த 2013-க்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையிலான நேரடி கிரிக்கெட் தொடர்கள் எதுவும் நடத்தப்படவில்லை. இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன. அதனால் எப்போதுமே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு எழும். அந்த வகையில் இந்த ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கிட்டத்தட்ட உலகக் கோப்பை போட்டிக்கு இணையாக ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய கோப்பை வரலாற்றில் இதுவரை 7 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் இந்தியா கடைசியாக கடந்த 2018இல் இதே துபாயில் 50 ஓவர் தொடராக நடைபெற்ற ஆசிய கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் வங்கதேசத்தை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது. அந்த வகையில் தற்போது நடப்புச் சாம்பியனாக களமிறங்கும் இந்தியா 8வது முறையாக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா-பாகிஸ்தான் இதுவரை 9 டி20 ஆட்டங்களில் மோதியுள்ளன. இந்தியா 6 வெற்றியும், பாகிஸ்தான் 2 வெற்றியும் பெற்றன. ஒரு ஆட்டம் டையில் முடிந்தது. 

இரு அணிகளின் ஆடும் லெவன்:

இந்திய அணி: ரோஹித் சர்மா(கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக்(வீக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், அவேஷ் கான், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான் அணி: பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, ஆசிப் அலி, ஷதாப் கான், முகமது நவாஸ், நசீம் ஷா, ஹாரிஸ் ரவுஃப், ஷாநவாஸ் தஹானி