விளையாட்டு

“பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் விளையாடலாமா?” - எதிரெதிர் கருத்தில் தோனி, கும்பளே

“பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் விளையாடலாமா?” - எதிரெதிர் கருத்தில் தோனி, கும்பளே

webteam

உலகக் கோப்பை தொடர் வருவதையொட்டி பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவது குறித்து முன்னாள் கேப்டன்கள் மகேந்திர சிங் தோனியும், அனில் கும்பளேவும் மாறுபட்ட கருத்தினை கூறியுள்ளனர்.

இந்தியா சிமெண்ட்ஸ் துணைத்தலைவர் மற்றும் முன்னாள் பிசிசிஐ தலைவர் சீனிவாசன் கிரிக்கெட்டில் கடந்து வந்த 50 ஆண்டுகள் பயணத்தை ‘காபி டேபிள் புக்’ என்ற பெயரில் புத்தகமாக நேற்று வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கபில்தேவ், கும்ளே, சேவாக் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கேப்டன்கள் தோனியும், கும்பளேவும் ஐபிஎல் தொடர்களில் பந்துவீச்சாளர்கள் பங்கேற்பது குறித்து மாறுபட்ட கருத்தினை தெரிவித்தனர். கும்பளே பேசுகையில், “உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஐபிஎல் உள்பட ஏராளமான கிரிக்கெட் போட்டிகள் உள்ளன. ஆனால், உலகக் கோப்பை தொடருக்கு பந்துவீச்சாளர்கள் சிறப்பான முறையில் தயாராக வேண்டியது முக்கியமானதாகும். ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கு வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற யோசனை இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, அது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்” என்றார். 

ஆனால், தோனி பேசுகையில், “பந்துவீச்சாளர்கள் காயமில்லாமல் இருப்பது மிகவும் முக்கியமானது. ஆனால், கிரிக்கெட் நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள், பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக விளையாடவில்லை என்றால் பயிற்சி இல்லாமல் போய் விடும் என்று சிலர் கூறுகின்றனர். தொடர்ச்சியாக விளையாடினால், ஓய்வில்லாமல் களைப்படைந்துவிடுவார்கள் என்று சிலர் கூறுகின்றனர். ஐபிஎல் போட்டிகளை முறையாக பயன்படுத்தினால், 4 ஓவர்கள் என்பது அவர்களை களைப்படைய செய்யாது. இங்கு முக்கியமானது என்னவென்றால் 4 ஓவர்கள் பந்துவீசிய பின் அவர்கள் என்ன செய்வார்கள் என்பதுதான்?. 

பந்துவீச்சாளர்கள் ஐபிஎல் தொடர் முழுவதையும் விளையாட முடியும். ஆனால், அவர்கள் என்ன சாப்பிடுகிறார்கள்? எப்பொழுது தூங்குகிறார்கள்? எப்பொழுது எழுந்திருக்கிறார்கள் என்பதை சரியாக வைத்துக் கொள்ள வேண்டும். என்னைப் பொருத்தவரை வீரர்களுக்கு ஐபிஎல் தொடர் நல்ல வாய்ப்புதான். மூன்று நாட்களுக்கு ஒரு முறை மூன்றரை மணி நேரம் தான் விளையாடுகிறோம். மற்ற நேரங்களில் ஜிம்களில் செலவிடுகிறோம்” என்று கூறினார். 

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறது. ஜனவரி 18ம் தேதிவரை இந்திய அணி ஆஸ்திரேலியாவில் விளையாடும். அதனையடுத்து, ஜனவரி 23ம் தேதி தொடங்கி பிப்ரவரி 10ம் தேதி வரை நியூசிலாந்து நாட்டில் இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது. அடுத்த ஆண்டு மார்ச் 29 தொடங்கி, மே 19 வரை ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. பின்னர், மே 30ம் தேதி உடனடியாக உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. ஐபிஎல் தொடருக்கும், உலக் கோப்பை தொடருக்கும் இடையே சுமார் 10 நாட்கள் மட்டுமே இடைவெளி இருக்கும்.