விளையாட்டு

மைக்கேல் கிளார்க் உடனான நட்பு முறிந்தது ஏன்? - ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஓபன் டாக்

மைக்கேல் கிளார்க் உடனான நட்பு முறிந்தது ஏன்? - ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஓபன் டாக்

JustinDurai

'எனக்கும் கிளார்க்குக்கும் இடையிலான உறவில் ஐபிஎல் பணம் விஷத்தை உண்டாக்கியது' எனக் கூறியுள்ளார் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க், கடந்த 2015ஆம் ஆண்டு 'ஆஷஸ் டைரி 15 'என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியிட்டிருந்தார். அதில் அவர் ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலரையும் விமர்சித்திருந்தார். ஆஸ்திரேலிய முன்னாள் ஆல்-ரவுண்டரான ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் குறித்து மைக்கேல் கிளார்க் தனது புத்தகத்தில், ''அணிக்கு பெரியதாக எதுவும் சாதிக்காமல், சைமன்ட்ஸ் குடித்து விட்டு கும்மாளம் போட்டவர். இப்படி தரம் தாழ்ந்த ஒருவர் மற்றொருவரை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லாதவர்'' என கடுமையான வார்த்தைகளால் குறிப்பிட்டிருந்தது அச்சமயத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் தி பிரட் லீ பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ஆண்ட்ரூ சைமண்ட்ஸ், மைக்கேல் கிளார்க் உடனான நட்பு முறிவு குறித்து பேசினார். இதுபற்றி சைமண்ட்ஸ் கூறுகையில்,  "ஐபிஎல் 2008 தொடரில் 5.4 கோடி ரூபாய்க்கு டெக்கான் சார்ஜர்ஸ் அணியால் தேர்ந்தெடுக்கப்பட்டதால், அதிக விலைக்கு வாங்கப்பட்ட வெளிநாட்டு வீரர் ஆனேன். ஐபிஎல் தொடங்கியபோது, ஐபிஎல்லில் விளையாடுவதற்கு எனக்கு நிறைய தொகை கிடைத்ததாக  மேத்யூ ஹைடன் சுட்டிக்காட்டினார். இதனால் மைக்கேல் கிளார்க்குக்கு கொஞ்சம் பொறாமை ஏற்பட்டு இருந்ததை அவர் அடையாளம் காட்டினார். பணம் வேடிக்கையான விஷயங்களைச் செய்கிறது. அது எனக்கும் கிளார்க்குக்கும் இடையிலான உறவில் விஷத்தை உண்டாக்கி இருக்கலாம் என்று நான் எண்ணுகிறேன். இருப்பினும் அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவருடன் நான் இப்போது நட்பில் இல்லை. ஆனால் நான் இங்கே உட்கார்ந்து சேற்றை வீசப் போவதில்லை'' என்றார்.

இதையும் படிக்க: என்னதான் ஆச்சு விராட் கோலிக்கு?' - வருத்தத்தில் ரசிகர்கள்