கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கார்லஸ் அல்காரஸ், 2வது இடத்தில் உள்ள செர்பியா நாட்டைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர். இவர்களில் ஜோகோவிச் 23 முறை கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றவர் ஆவார். அதிலும் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்ந்து கிராண்ட்மாஸ்டர் பட்டம்வென்றவராவார்.
இதனால் ஜோகோவிச் இம்முறையும் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேநேரம் இளம் வீரரான அல்காரஸ் மீதும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இதனால் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் முதல் செட்டை ஜோகோவிச் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து சுதாரித்து விளையாடிய அல்காரஸ் 7-6 (8-6) என்ற கணக்கிலும், 3-வது செட்டை 6-1 என்ற கணக்கிலும் வென்று அசத்தினார். 4வது செட்டை 3-6 என்ற கணக்கில் இழந்த அவர், கடைசி செட்டை 6-4 என்ற கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
சுமார் 4.45 மணி நேரம் நீடித்த இப்போட்டி ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைந்தது. இந்த வெற்றி மூலம் அல்காரஸ் முதல்முறையாக விம்பிள்டன் பட்டம் வென்றுள்ளார். மேலும், ஆல் இங்கிலாந்து கிளப்பில் தனது முதல் சாம்பியன்ஷிப்பையும், ஒட்டுமொத்தமாக இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் கோப்பையையும் வென்றிருக்கிறார் 20 வயதேயான அல்காரஸ்.
அல்காரஸை பாராட்டும் விதமாக, மாஸ்டர் பட போஸ்டரில் அல்காரஸை ரீ-க்ரியேட் செய்து வெளியிட்டுள்ளது விம்பிள்டன். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.