ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த ஒருவர் செய்த புல்களால் ஆன கிரிக்கெட் உலகக் கோப்பை வடிவம் ஐசிசி மற்றும் கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஐபிஎல் தொடர் இறுதிகட்டத்தை அடைந்துள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளில் மூழ்கியுள்ளனர். ஐபிஎல் தொடரை தொடர்ந்து உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் தொடங்கவுள்ளது. இதனால் மற்ற நாடுகள் உலகக் கோப்பை திருவிழாவிற்கு தயாராகி வருகின்றனர். அந்தவகையில் ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த இளைஞர் ஒருவர் புல்களால் ஆன ஒரு உலகக் கோப்பையை தயாரித்துள்ளார்.
ஆஃப்கானிஸ்தானின் காபூல் நகரை சேர்ந்தவர் ஷராஃப் நையிப். இவர் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகர். இவரது தோற்றத்தை வைத்து ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் குலாப்தின் நையிப்பின் தம்பி எனப் பலர் தவறாக நினைத்து கொண்டனர். இவரின் கிரிக்கெட் ஆர்வம் உலகக் கோப்பையின் மாதிரியை செய்ய தூண்டியுள்ளது. இதனால் அவர் புல்களை வைத்து உலகக் கோப்பை மாதிரியை செய்து முடித்தார்.
இந்தப் புகைப்படத்தை உலகக் கோப்பை தொடருக்கான ட்விட்டர் பக்கம் பகிர்ந்துள்ளது. அத்துடன் அந்த ட்வீட்டில், “எங்களுக்கு இது மிகவும் பிடித்துள்ளது. இதைச் செய்த நபரை பார்க்கவேண்டும் என்ற ஆசை அதிகரித்துள்ளது” எனப் பதிவிட்டுள்ளது. இதனையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் அவரை ட்விட்டரில் பாராட்டி வருகின்றனர்.