2023 ஆடவர் ஹாக்கி உலகக்கோப்பை போட்டிகள் நாளை தொடங்குகிறது. இது இம்மாதம் 29 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் தொடக்க விழா ஒடிசா மாநிலம் கட்டக்கில் கோலாகலமாக நடந்தது. மாநில முதல்வர் நவீன் பட்நாயக் விழாவைத் தொடங்கி வைத்தார். இதில் விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் தாகூர், நடிகர் ரன்வீர் சிங், நடிகை திஷா பதானி உள்ளீட்டோர் கலந்துக்கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நாளை மதியம் 1 மணிக்கு முதல் போட்டியில் ஏ பிரிவில் அர்ஜென்டினா - தென்ஆப்ரிக்க அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து 3 மணிக்கு இதே பிரிவில் ஆஸ்திரேலியா - பிரான்ஸ் விளையாட உள்ளன. மாலை 5 மணிக்கு டி பிரிவில் இங்கிலாந்து - வேல்ஸ் மோதுகின்றன. இந்தியா தனது முதல் போட்டியில் நாளை இரவு 7 மணிக்கு ஸ்பெயினுடன் மோதுகிறது. 15ம் தேதி இங்கிலாந்தையும், 19ம் தேதி வேல்ஸ் அணியையும் எதி்ர்கொள்கிறது.
இந்த தொடரில் மொத்தம் 44 போட்டிகள் நடைபெறுகிறது. இதற்காக ரூர்கேலா என்ற நகரத்தில் உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்தை ஒடிசா அரசு கட்டி இருக்கிறது. இதில் மொத்தம் 20 போட்டிகளும், கலிங்காவில் உள்ள மைதானத்தில் 24 போட்டிகள் நடைபெறும். வரும் 29ம் தேதி இறுதி போட்டி புவனேஸ்வர் கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக கால் இறுதிக்குச் செல்லும்.