விளையாட்டு

கடைசி ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள்.! பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் ஷமி அசத்தல்.!

கடைசி ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள்.! பரபரப்பான ஆட்டத்தின் இறுதியில் ஷமி அசத்தல்.!

Rishan Vengai

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தில் இரு அணிகளும் கடைசிவரை வெற்றிக்கு போராடிய நிலையில், பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் முகமது ஷமியின் அபார பந்துவீச்சால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங்க் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ராகுல் ஆரம்பித்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த 5 ஓவர்களிலேயே இந்திய அணி 50 ரன்களை கடந்து இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுதியது. 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசிய கேஎல் ராகுல் அரைசதம் கடந்து 57 ரன்கள் இருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். 7.3 ஓவர்களில் 78க்கு முதல் விக்கெட்டை இழந்த இந்திய அணி அடுத்தடுத்து சீரான ரன்கள் இடைவெளியில் விக்கெட்டுகளை விட்டுகொடுத்தது. நல்ல தொடக்கத்தை கொடுத்த கோலி 19 ரன்களில் வெளியேற பின்னர் ஜோடி சேர்ந்த சூரியகுமார் மற்றும் தினேஷ் கார்த்திக் கூட்டணியின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவர் வரை நிலைத்து நின்று ஆடிய சூரியகுமார் அரைசதம் கடந்து 50 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

187 ரன்கள் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் பிஞ்ச் மற்றும் மிட்சல் மார்ஸ் இருவரும் இந்திய பந்துவீச்சை பவுண்டரி, சிக்சர்களுக்கு பறக்கவிட்டனர். அதிரடியாக விளையாடிய மிட்சல் மார்ஸ் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடித்து 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் புவனேஷ்வர் பந்தில் பவுல்டாகி வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டீவன் ஸ்மித்தை சாஹல் பவுல்டாக்கி பெவிலியன் திருப்ப, பின்னர் வந்த க்ளென் மேக்ஸ்வெல் நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் புவனேஷ்வர் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும் மறுபுறம் பிஞ்ச் நிலைத்து நின்று பவுண்டரிகள், சிக்சர்கள் என விளாசி இலக்கை துரத்தி கொண்டே இருந்தார்.

கடைசி 3 ஓவர்களுக்கு 29 ரன்கள் தேவை என்ற இடத்தில் 18ஆவது ஓவரில் அர்ஸ்தீப் வீசிய பந்தை பிஞ்ச் சிக்சர், டிம் டேவிட் பவுண்டரி என விளாச 14 ரன்களை பெற்றது ஆஸ்திரேலியா. கடைசி இரண்டு ஓவர்களுக்கு 16 ரன்கள் இருந்த நிலையில், 19ஆவது ஓவர் வீச வந்த ஹர்சல் பட்டேல் முதல் பந்திலேயே கேப்டன் பிஞ்ச்-ஐ பவுல்டாக்கி வெளியேற்றினார். அதன் பிறகே ஆட்டத்தில் இன்னும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஹர்சல் பட்டேல் இரண்டாவது பந்தை வீச ஜொஷ் இங்லிஸ் அதை எதிர்கொண்டு சிங்கிளிற்கு ஓட எதிர்முனையில் இருந்த அதிரடி வீரர் டிம் டேவிட்டை ரன்அவுட் ஆக்கினார் விராட் கோலி. 19 ஓவது முடிவில் 5 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 2 விக்கெட்டுகளுடன் முடித்தார் ஹர்சல் பட்டேல்.

கடைசி ஓவரில் எந்த பந்துவீச்சாளர் வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2 நாட்களுக்கு முன்பே அணியில் சென்று இணைந்த முகமது ஷமி 20ஆவது ஓவரை வீச வந்தார். 6 பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற இடத்தில் ஆஸ்திரேலியாவின் டெய்ல் எண்டர்ஸ் 2,2 ரன்களாக ஓடி போட்டியில் விறுவிறுப்பை கூட்டினர். 3ஆவது பந்தில் கம்மின்ஸ் விக்கெட்டை வீழ்த்தி வெளியேற்றினார் ஷமி. 4ஆவது பந்தில் ஆகரை ரன் அவுட் செய்த ஷமி 5ஆவது மற்றும் 6ஆவது பந்துகளில் அடுத்தடுத்து ஸ்டம்ப்புகளை தெறிக்கவிட்டார். கடைசி ஓவரில் 4 ரன்களை விட்டுகொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இறுதியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரெலியாவை வெற்றி பெற்றது.