விளையாட்டு

2023 ஆசியக்கோப்பை… ஒரே பிரிவில் இருக்கும் இந்தியா - பாகிஸ்தான்!

2023 ஆசியக்கோப்பை… ஒரே பிரிவில் இருக்கும் இந்தியா - பாகிஸ்தான்!

webteam

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ளன.

ஆசிய கண்டத்தில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளைக் கொண்டு 1984ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இத்தொடரில்,  இந்திய அணி ஏழு முறை கோப்பையை வென்றுள்ளது. கடந்த ஆண்டு (2022) பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில், 2023 செப்டம்பர் மாதத்தில் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இன்று (ஜனவரி 5) வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆசியக் கோப்பை 2023 செப்டம்பரில் நடைபெற இருக்கிறது. இத்தொடர் 50 ஓவர் போட்டியாக நடைபெற இருக்கிறது. 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு 20 ஓவர் போட்டிகளாக நடைபெற்று வந்த ஆசியக் கோப்பை, மீண்டும் 50 ஓவர் போட்டியாக நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தத் தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. மற்றொரு பிரிவில், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.

அத்துடன், இந்த முறை இத்தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த வாய்ப்புள்ளது எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணி கடைசியாக 2008 ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்குச் சென்றது. அவ்வருடம் நவம்பர் 26 ஆம் தேதி நடந்த மும்பை தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பு தொடர்கள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டு விட்டன. இருப்பினும், இரு அணிகளும் ஐசிசி மற்றும் ஏசிசி நிகழ்வுகளில் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில், ஆசியக்கோப்பையில் ஒரே பிரிவில் பரம எதிரிகளான பாகிஸ்தானும் இந்தியாவும் இடம்பிடித்திருப்பது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை இப்போதே அதிகப்படுத்தியுள்ளது. முன்னதாக, இந்த ஆசியக் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துவதால், இந்தியா அதில் கலந்துகொள்ளாது என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்திருந்தார்.

அதுபோல் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டும் இந்தியா நடத்தும் 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்காது என தெரிவித்திருந்தது. ஆசியக் கோப்பைக்குப் பிறகுதான் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இரு அணிகளும் ஆசியக் கோப்பையில் மீண்டும் மோத இருப்பது ரசிகர்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கிறது.