விளையாட்டு

’இவ்ளோ மோசமான அனுபவமா! உணவு கூட வழங்கவில்லை’ - மலேசிய ஏர்லைன்ஸை விளசிய தீபக் சாஹர்!

’இவ்ளோ மோசமான அனுபவமா! உணவு கூட வழங்கவில்லை’ - மலேசிய ஏர்லைன்ஸை விளசிய தீபக் சாஹர்!

Rishan Vengai

வங்கதேசத்தில் இருக்கும் இந்திய அணியில் இணைய நியூசிலாந்தில் இருந்து பங்களாதேஷிற்கு பயணித்த தீபக் சாஹர், பயணத்தின் போது மலேசியன் ஏர்லைன்ஸில் நடந்த மோசமான அனுபவம் குறித்து டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி நாளை டிசம்பர் 4 அன்று, வங்கதேசத்தின் தலைநகரமான தாகாவில் ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்திய அணியில் இணைவதற்காக இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர், நியூசிலாந்திலிருந்து வங்கதேசத்திற்கு மலேசியன் ஏர்லைன்ஸில் பயணம் செய்துள்ளார். அப்போது நடந்த மோசமான அனுபவத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தீபக் சாஹர்.

அவர் பதிவிட்டிருக்கும் பதிவில், “மலேசியா ஏர்லைன்ஸ் @MAS உடன் பயணித்த அனுபவம் மிகவும் மோசமானது. முதலில் அவர்கள் எங்களிடம் சொல்லாமல் எங்கள் விமானத்தை மாற்றினார்கள், பிசினஸ் வகுப்பில் பயணித்த போதும் உணவு இல்லை. மேலும் நாங்கள் கடந்த 24 மணிநேரத்திலிருந்து எங்கள் லக்கேஜ்களுக்காகக் காத்திருக்கிறோம். நாளை எங்களுக்கான போட்டி இருக்கிறது, அதை கற்பனை செய்து பாருங்கள் “ என்று பதிவிட்டிருந்தார்.

இதுகுறித்து தீபக் சாஹர் உடைய பதிவில் கமெண்ட் செய்திருக்கும் மலேசியன் ஏர்லைன்ஸ், "செயல்முறை, வானிலை தொடர்பான மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் தவிர்க்க முடியாமல் இருந்திருக்கலாம். ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்," என்று பதிலளித்துள்ளது. மேலும் கம்லைண்ட் லிங்கில் நீங்கள் புகார் தெரிவிக்கலாம் என்று ஒரு லிங்கை இணைந்திருந்ததற்கு, அந்த லிங்க் வேலை செய்யவில்லை என்று பதிலளித்துள்ளார் தீபக் சாஹர்.

சாஹர், முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஷிகர் தவான், ஷுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நியூசிலாந்தில் ஒருநாள் போட்டியை முடித்துக் கொண்டு கிறிஸ்ட்சர்ச்சிலிருந்து கோலாலம்பூர் வழியாக டாக்காவுக்குப் பறந்து கொண்டிருந்தனர்.

சூர்யகுமார் யாதவ் மற்றும் உம்ரான் மாலிக் விமானம் மூலம் இந்தியா திரும்பியுள்ளனர். இருப்பினும், காயம் அடைந்த முகமது ஷமிக்கு பதிலாக ஒருநாள் அணியில் இடம்பிடித்த மாலிக் இப்போது பங்களாதேஷுக்குச் செல்கிறார்.