இந்திய கிரிக்கெட்டர் பிரித்வி ஷா செல்ஃபி சர்ச்சை விவகாரத்தில் 8 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில், பிரித்வி ஷா தான் முதலில் அடித்தார் என்றும், அவர் குடித்திருந்தார் என்றும் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான பெண் ஒருவர் சார்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
சமீபகாலமாக கிரிக்கெட்டர்கள் சர்ச்சைகளில் சிக்குவது அதிக வாடிக்கையான ஒன்றாக இருந்துவருகிறது. அந்த வரிசையில் தற்போது இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான பிரிதிவி ஷா-வும் இணைந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நட்சத்திர ஓட்டல் ஒன்றில், பிரித்வி ஷா அவரது நண்பர்களுடன் இரவு உணவிற்காக சென்றிருந்த போது, அங்கு வந்த ஒரு குழுவினர் செல்பி எடுக்க கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு முதலில் இரண்டு பேர் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள் என பிரித்வி ஷா கூறியதாக தெரிகிறது. பின்னர் 2 பேர் செல்ஃபி எடுத்துக்கொண்ட பிறகு, மீண்டும் வந்த அந்த குழுவினர் அவர்கள் எல்லோரும் மொத்தமாக செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டுமென கூறியுள்ளனர். ஆனால் அதற்கு தான் நண்பர்களுடன் உணவருந்த வந்திருக்கிறேன் தொந்தரவு செய்யாதீர்கள் என பிரித்வி ஷா செல்ஃபி எடுக்க மறுத்துவிட்ட நிலையில், அந்த குழுவினர் செல்ஃபி எடுக்க வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து பிரித்வி ஷா சார்பில் ஓட்டலில் புகார் தெரிவிக்கப்பட்டு, அந்த குழுவினர் ஓட்டலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பின்னர் பிரித்வி ஷாவும், அவர்களது நண்பர்களும் வெளியே வந்த பிறகு, அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த குழுவினர், பிரித்வி ஷா வந்த காரை கையில் கொண்டுவந்த பேட்டை வைத்து அடித்து நொறுக்கியதாகவும், தொடர்ந்து பொய்யான வழக்கு போட்டுவிடுவோம் என மிரட்டி பணம் கேட்டதாகவும், 8 பேர் மீது பிரித்வி ஷா சார்பில் காவல்நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்கப்பட்ட 8 பேர்களில் ஒருவரான ஷப்னா கில் என்ற பெண் சார்பாக, “ பிரித்வி ஷா குடித்திருந்த நிலையில் கையில் பேட் வைத்திருந்ததாகவும், அந்த பேட்டால் அவர் தான் ஷப்னா கில் என்ற பெண்ணை முதலில் அடித்ததாகவும்” குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து ANI இடம் பேசியிருக்கும் கில்லின் வழக்கறிஞர் அலி காஷிப் கான் தேஷ்முக், " நட்சத்திர ஹோட்டலுக்கு வந்த பிரித்வி ஷாவிடம், ஒரு ரசிகையாக மட்டும் தான் ஷப்னா கில் செல்ஃபி எடுக்க கேட்டுள்ளார். இரண்டாவது முறை செல்ஃபி எடுக்க கேட்டபோது குடிபோதையில் இருந்த பிரித்வி ஷா, செல்ஃபி எடுக்க மறுத்து ஷப்னா கில்லை கையில் வைத்திருந்த பேட்டால் முதலில் தாக்கியுள்ளார். பின்னர் அதே பேட்டை கொண்டுவந்து புகாரளித்துள்ளார்” என்று கூறினார்.
மேலும், "நல்ல மதிப்போடு இருக்கும் ஷப்னா கில் மீது புகார் அளித்திருப்பதை தொடர்ந்து, பிரித்வி ஷா குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காகவும், ஒரு பைக்கை அடித்து நொறுக்கியதற்காகவும், அவர் மீது 354, 509, 334 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும். சப்னா கில்லுக்கும், பிருத்வி ஷாவுக்கும் கடந்த காலத்தில் எந்தவிதமான தொடர்பும் இல்லை, ஒரு ரசிகையாக மட்டும் தான் அவருடன் செல்ஃபி எடுக்க விரும்பினார். பிரிதிவி ஷாவிற்கு எதிராக எஃப் ஐ ஆர் பதிவு செய்ய வலியுறுத்துவோம்” என்று கூறியுள்ளார்.