விளையாட்டு

‘ஜனவரி வரை அந்தக் கேள்வியை கேட்காதீர்கள்’ - மௌனம் கலைத்த தோனி!  

‘ஜனவரி வரை அந்தக் கேள்வியை கேட்காதீர்கள்’ - மௌனம் கலைத்த தோனி!  

webteam

தன்னுடைய எதிர்காலம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜனவரி மாதம் வரை கேட்க வேண்டாம் என தோனி பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை தொடருக்கு பின்பு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தோனி மீண்டும் எப்போது கிரிக்கெட்டில் களமிறங்குவார் என்று ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில், முதல்முறையாக தனது வருங்கால திட்டம் குறித்து கேள்விக்கு தோனி பதிலளித்துள்ளார். இன்று மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தோனி பங்கேற்றார். அப்போது தோனியிடம் உங்களது வருங்கால திட்டம் என்ன? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு தோனி, “ஜனவரி மாதம் வரை என்னிடம் இந்தக் கேள்வியை கேட்காதீர்கள்” எனத் தெரிவித்து சென்றுள்ளார். 

முன்னதாக நேற்று தோனியின் வருங்காலம் குறித்த கேள்விக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, “இந்திய கிரிக்கெட் அணியில் மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் குறித்து தெரிந்து கொள்ள ஐபிஎல் தொடர் வரை பொறுத்திருக்க வேண்டும் ”எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தோனி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை இன்னும் கொஞ்ச காலம் தொடரப்போகிறாரா அல்லது ஓய்வு பெறப் போகிறாரா என்ற விவாதங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இருப்பினும், தோனி தொடர்ச்சியாக மவுனம் சாதித்தே வந்தார். எந்தவொரு விளக்கத்தையும் அவர் இதுவரை அளிக்கவேயில்லை. தற்போதுதான் முதல் முறையாக தன்னுடைய எதிர்காலம் குறித்த கேள்வியை எதிர்கொண்டுள்ளார். ஆனால், முழுமையாக அவர் பதில் அளிக்கவில்லை. ஜனவரி வரை இந்தக் கேள்வியை கேட்காதீர்கள் என்று கூறி பதிலை முடித்துக் கொண்டார். ஏன் ஜனவரி வரை என்று தோனி சொன்னார் என்று பலரும் யோசிக்க தொடங்கியுள்ளனர். 

ஜனவரி மாதம் முதலே இந்திய அணிக்கு முக்கியமான கிரிக்கெட் தொடர்கள் வரவுள்ளது. ஜனவரி மத்தியில் ஆஸ்திரேலியா அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. அதன்பிறகு, நியூசிலாந்து அணியுடன் பெரிய தொடரில் இந்திய அணி மோதுகிறது. பின்னர், தென்னாப்பிரிக்கா தொடர் வரவுள்ளது. அதனால், இந்த முக்கிய தொடர்களை கவனத்தில் வைத்து தோனி ஜனவரி என்பதை குறிப்பிட்டு சொல்கிறாரா என்ற சந்தேகம் எழுகிறது.