விளையாட்டு

”சஞ்சு சாம்சன் எப்போதுமே அணிக்காக தயாராக இருக்கிறார்... ஆனால் அவரை”- முகமது கைஃப் வேதனை

”சஞ்சு சாம்சன் எப்போதுமே அணிக்காக தயாராக இருக்கிறார்... ஆனால் அவரை”- முகமது கைஃப் வேதனை

Rishan Vengai

“இந்திய கிரிக்கெட் அணியில், ஒருவீரர் எப்போதும் அணிக்காக தயாராகவே இருக்கிறார். ஆனால் அவரை இன்னும் உலகக்கோப்பைக்கான வீரராக இந்திய அணி பார்க்கவே இல்லை” என்று வேதனை கூறியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப்.

ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் தலைமையில் மூன்று டி20 போட்டிகள் கொண்ட நியூசிலாந்து தொடரில் இருந்து, இந்திய டி20 அணியின் மாற்றத்துக்கான முயற்சி தொடங்குகிறது. அணியின் சீனியர் வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே எல் ராகுல், ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்ட பல மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, இந்திய அணி இளம் திறமைகளால் இந்த முறை நிறைந்துள்ளது.

இந்நிலையில் எதிர்கால இந்திய டி20 அணியைப்பற்றி பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப். அவர், "எதிர்காலத்தைப் பற்றி பேசுகையில், ஒரு வீரர் எப்போதும் தயாராகவே இருக்கிறார். ஆனால் இன்னும் உலகக் கோப்பைக்காக அவர் தேர்வு செய்யப்படவில்லை. அந்த வீரர், சஞ்சு சாம்சன். நடந்து முடிந்த இந்த டி20 உலகக்கோப்பைக்கே சஞ்சு சாம்சன் 5-வது இடத்திற்கு தயாராக இருந்தார். அவர் பல ஆண்டுகளாக ஐபிஎல் விளையாடி வருகிறார். மேலும் ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியையும் வழிநடத்தி வருகிறார். இந்த ஆண்டும் அவர் அதை செய்தார். ஆம், இந்த முறையும் சஞ்சு சாம்சன் இறுதிப் போட்டிக்கு தன் வீரர்களை வழிநடத்தினார்” என்று கூறியுள்ளார்.

மேலும் பேசுகையில், “சாம்சன் மேற்கிந்தியத் தீவுகளில் மேட்ச் வின்னிங் நாக்ஸ் விளையாடினார். 2-3 விக்கெட்டுகள் விழுந்த போதும், அவர் உள்ளே வந்து அடித்து ஆடினார். சுழற்பந்து வீச்சாளர் பந்துகளை பவுண்டரிகள், சிக்ஸர்களுக்கு அனுப்பும் திறமை அவருக்கு உண்டு. அவர் அனைத்துக்கும் தயாராகவே இருந்தார். ஆனால் உலகக் கோப்பைக்கான அணியில் அவர் எடுக்கப்படவில்லை. அது தவறு” என்று கூறினார்.

சாம்சன் இந்திய அணிக்காக டி20 போட்டியில் 2015ல் அறிமுகமானார். ஆனால் இதுவரை அவரால் வெறும் 16 போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடியுள்ளார். தற்போது நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இடம்பெற்றிருக்கும் விக்கெட் கீப்பர் - பேட்டர் சஞ்சு சாம்சன், 16 பேர் கொண்ட அணியில் அவருக்கான இடத்தை இலக்காகக் கொண்டு செயல்படவேண்டும்.

2022 டி20 உலகக் கோப்பையை மோசமான தோல்வியோடு வெளியேறி இருக்கும் இந்திய அணி, அடுத்த டி20 உலகக்கோப்பைக்கு இளம் வீரர்களை கொண்ட பலம்வாய்ந்த அணியாக தயாராகும் முனைப்பில் இறங்கியுள்ளது. அதற்கான அத்தனை டேலண்டான வீரர்களும் இந்திய அணியில் உள்ளனர். சரியான வீரர்களை தேர்வு செய்து பலமான ஒரு இந்திய அணியை உருவாக்க வேண்டிய பொறுப்பு பிசிசிஐக்கு அதிகமாகவே இருக்கிறது.