விளையாட்டு

“ஜான்டி ரோட்ஸ் தேர்வு செய்யப்படாதது ஏன்?” - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்

“ஜான்டி ரோட்ஸ் தேர்வு செய்யப்படாதது ஏன்?” - எம்.எஸ்.கே பிரசாத் விளக்கம்

webteam

இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் தேர்வு செய்யப்படாததற்கு காரணத்தை இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே பிரசாத் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் பயிற்சியாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். இதில் ஏற்கெனவே இருந்த பரத் அருண் மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவரும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டனர். பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தூர் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ் விண்ணப்பத்திருந்தார். எனினும் இறுதியாக தேர்வாகிய மூவர் பட்டியலில் ஜான்டி ரோட்ஸ் பெயர் இல்லை. 

இந்நிலையில் இந்தியாவின் ஃபீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் தேர்வு ஆகாதது குறித்து எம்.எஸ்.கே பிரசாத் கருத்து தெரிவித்துள்ளார். அதில், “இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் பொறுப்பிற்கு ஸ்ரீதர் தான் சரியாக இருந்தார். இந்தப் பட்டியலில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் ஜான்டி ரோட்ஸ் தகுதியாக இருக்க மாட்டார். ஏனென்றால் அது இந்தியா- ஏ அணி மற்றும் யு-19 அணிக்கான ஃபீல்டிங் பயிற்சியாளர் பதவி. இதற்கு ஜான்டி ரோட்சை தேர்வு செய்வது கடினம். 

மேலும் தற்போது இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் இந்திய அணியின் ஃபீல்டிங் தரத்தை அதிகரித்துள்ளார். உலகளவில் சிறந்த ஃபீல்டிங் பயிற்சியாளர்கள் பட்டியலில் தற்போது ஸ்ரீதர் இடம் பிடிப்பார். அவர் இந்திய அணியின் வீரர்களை சிறந்த ஃபீல்டர்களாக மாற்றியுள்ளார். உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் 3 விக்கெட் கீப்பர்கள் இடம் பெற்றிருந்தனர். அதனால் தான் இந்திய அணியின் ஃபீல்டிங் எதிர்பார்த்தபடி அமையவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.