சுந்தரர் PT
கோயில்கள்

‘என் நண்பனுக்கு தீங்கு செய்பவர்கள் யாவரும்...’ சுந்தரருக்காக சிவனடியார் மீதே கோபம் கொண்ட ஈசன்!

சுந்தரமூர்த்தி நாயன்மாரின் வரலாறு பாகம் 4

Jayashree A

முந்தைய பகுதி:

தற்போது...

கடந்த பகுதி சுருக்கமாக: ‘சுந்தரர் திருவாரூர் சென்றடைந்த போது, சங்கிலியார் - சுந்தரரின் திருமணம் பற்றிய செய்தியை அறிந்து, சுந்தரர் மீது கடும் கோபத்தில் இருந்தார் பரவை நாச்சியார்’

இனி:

பரவையாரைக் காணச் சென்ற சுந்தரரை, வீட்டின் உள்ளேயே அனுமதிக்கவில்லை பரவையார். அவருடன் பேசவும் இல்லை. சுந்தரர் மிகவும் மனம் வருந்தி அவ்வூர்க்கோயில் மண்டபத்திற்கு வந்து அமர்ந்துக்கொண்டார். தன் மனைவி தன்னை வெறுத்ததை சுந்தரரால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

இது அனைத்திற்கும் காரணம் அந்த ஈசன் தான் என நினைத்தவர், தியாகேசப் பெருமானைத் தொழுதார். “என் மீது கோபம் கொண்ட என் மனைவியை ஆறுதல் செய்து, என்னை மீண்டும் அவளுடன் சேரும்படிச் செய்ய வேண்டும்” என்று வேண்டினார்.

தன் தோழனுக்காக மனமிறங்கிய சிவபெருமான், தேவர்களை நாடி ‘நீங்கள் அனைவரும் அடியவர் கோலத்துடன் என்னுடன் வரவேண்டும்’ எனக்கூறினார். பின் அவர்களுடன் பரவையார் வீடு நோக்கிச் சென்றார்.

ஆனால் பரவையாரின் கோபத்தை சிவனாலும் தணிக்க முடியவில்லை. ஆகவே சுந்தரரிடம் வந்து, “சுந்தரா... நானும் பரவைநாச்சியாரிடம் எவ்வளவோ எடுத்துக்கூறினேன். ஆனால் பரவையார் சமாதானம் ஆகவில்லை... நான் என்ன செய்வது?” என்றார்.

சுந்தரர்

“எனக்கு அதெல்லாம் தெரியாது; நீ சொன்ன ஒரு காரணத்திற்காக தான் நான் சங்கிலியாரை திருமணம் செய்துக்கொண்டேன். இப்பிரச்சனை உன்னால் தான் வந்தது. ஆகவே நீதான் எங்கள் இருவரையும் சேர்த்து வைக்கவேண்டும்” என்றார்.

“சரி என் தம்பிரானுக்காக மீண்டும் ஒரு முறை பரவையாருடன் பேசி பார்கிறேன்” என்றவர், சுந்தரருக்காக மீண்டும் பரவையாரிடம் தூது சென்றார்.

அப்போது, சுந்தரருக்காக தூது வந்தது ஈசன் தான் எனத்தெரிந்ததும் பரவையாரின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது. “நான் எத்தனை பெரிய நயவஞ்சகியாகி விட்டேன்... எனது பிடிவாதத்தால் வந்திருப்பது ஈசன் என்பதை அறியாமல் போனேனே... எப்பெண்ணுக்குத்தான் இத்தகைய பாக்கியம் கிடைக்கும்?” என்று கவலை பட்டுக்கொண்டிருந்த நேரம், மறுபடியும் சிவபெருமான் தனது படைகளுடன் மீண்டும் பரவைநாச்சியாரை காண வந்தார்.

இந்த முறை சிவனடியார் கோலத்தில் வந்திருந்த ஈசனை அடையாளம் கண்டுக்கொண்ட பரவை நாச்சியார் ஏதும் சொல்லாது அவரின் பாதங்களை வணங்கினாள். சுந்தரரை ஏற்றுக்கொள்வதாக சம்மதித்தாள். ஈசனின் முயற்சியால் மீண்டும் பரவை நாச்சியாரும் சுந்தரரும் இல்லறத்தில் ஈடுபட்டனர்.

இச்செய்தியானது காட்டுத்தீப்போல் அவ்வூரில் பரவ... அவ்வூரில் இருந்த ஏயர்கோன் கலிக்காமர் என்ற சிவனடியாரால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சுந்தரரின் மேல் பொறாமைக்கொண்டார். அவருக்கு தீங்கு செய்ய முற்பட்டார்.

இது ஈசனுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. “என் நண்பனுக்கு தீங்கு செய்பவர்கள் யாவரும் தண்டனை பெறவேண்டும் என நினைத்தவர், அந்த அடியவருக்கு சூலை நோயை உண்டாக்கினார். பிறகு தான் அந்த அடியவருக்கு தான் செய்வது எத்தகைய தப்பு என்பது புரிந்தது. கலிக்காமர் சுந்தரரிடம் மன்னிப்புக்கேட்டார். சுந்தரரும் அவருக்கு இருந்த சூலை நோயை அகற்றுமாறு ஈசனை வேண்ட... அதன் பிறகு கலிக்காமருக்கும் சுந்தரருக்கும் இடையே நெருங்கிய நட்பு ஏற்பட்டது.

அடுத்தது என்ன?... நாளை பார்க்கலாம்.