சித்திரை திருவிழாவின் 11ம் நாளான இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது வருகிறது.
நம் ஊர் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தேர் திருவிழாவின் போது, பிரம்மாண்டமான தேரில் தெய்வங்களை ஊர்வலமாக ஏற்றிச்செல்வர். அந்த பிரம்மாண்டமான தேர், நம் வீதிகளில் வலம் வருவதைப் பார்க்கும்போதே, அவ்வளவு பரவசமாக இருக்கும். வண்ணமயமான துணி விதானம், பூங்கொத்துகள், மலர்கள், அவற்றின் சரங்கள், அதில் கட்டப்பட்ட மரக்குதிரைகள், ஊர்வலம் செல்லும் தெய்வங்களை சுமந்து செல்லும் புலவர் என.... அடடா கண்கொள்ளாக் காட்சி அவை!
சொல்லப்போனால் இதுபோன்ற கோவில்களில் தேர் திருவிழா கொண்டாடுவது இந்தியாவில் பழங்கால பழக்கம். ரிக் மற்றும் அதர்வ வேதங்களில்கூட 'கார்' (ரத்தை) பற்றிய குறிப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ராமாயணம், மகாபாரதம் மற்றும் பிற தமிழ் இலக்கியப் படைப்புகளில் போர் மற்றும் அரச ரதங்களைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
அந்த வகையில் மதுரை சித்திரை திருவிழாவில் இழுக்கப்படும் சிறப்பு வாய்ந்த இந்தத் தேர், கி.பி.16-ம் நூற்றாண்டில் திருமலை நாயக்கரால் சுந்தரேசுவரர் சுவாமிக்கு பெரியதாகவும், மீனாட்சி அம்மனுக்கு சிறியதாகவும் வடிவமைக்கப்பட்டது. அதுபற்றிய சில தகவல்களையும், தேரோட்டம் குறித்த சுவாரஸ்யங்களையும் இங்கே காண்போம்:
* இந்த தேரில் 64 திருவிளையாடல் புராணங்கள், திருவிழா பற்றிய சிறப்புகள் மரச்சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளது.
* இத்தேரின் அமைப்பு அண்ட பிண்டத்திற்கு சமானம். அதனால் 8 அடுக்குகளாக தேர் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
* மீனாட்சி திருக்கல்யாணத்தை கோயிலுக்குள் வந்து பார்க்க முடியாத முதியவர்கள், பக்தர்கள் உள்ளிட்டோரின் குறையை போக்கும் விதமாக திருக்கல்யாணத்திற்கு அடுத்த நாள் மீனாட்சி அம்மன் - சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் மணக்கோலத்தில் தேர்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
* இத்தேர்களில் அனைத்து தேவர்களும் எழுந்தருளுவர். அதனால் இத்தேரை காண்பது அனைத்து தெய்வங்களையும் ஒரே நேரத்தில் தரிசிப்பதற்கு சமம் என சொல்லப்படுகிறது. அதனால் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் பார்க்கப்படுகிறது.
* இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்வான திருத்தேரோட்டத்தில், நேற்று காலை 6:35 மணிக்கு கீழமாசி வீதி தேர்முட்டியில் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வெண்நிற, பச்சை நிற முண்டாசு கட்டி சுவாமியும்; ரோஸ் பட்டு, நீல நிற முண்டாசு கட்டி பிரியாவிடையும் எழுந்தருளினர். அடுத்ததாக அலங்காரத் தேரில் ரோஸ் பட்டு, மஞ்சள் முண்டாசு கட்டி, சர்வ அலங்காரத்தில் மீனாட்சி அம்மன் எழுந்தருளினார்.
* சிவனடியார்களின் சங்கொலி முழங்க, மங்கள நாதஸ்வரம் மேளம் இசைக்க, மீனாட்சி சுந்தரர் கோஷம் விண்ணை பிளக்க, பஞ்ச மூர்த்திகள் எழுந்தருள, இன்று காலை 6:00 மணிக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்களின் கடலில் மிதந்து வந்த படி திருத்தேரோட்டம் மாசி வீதிகளில் கோலாகலமாக நடந்தது. சுவாமி பிரியாவிடை தேர் மதியம் 12:00 மணி அளவிலும், அம்மன் தேர் மதியம் 12:30 மணி அளவிலும் நிலையை அடைந்தன.
* முதலில் பெரிய தேரும், சிறிது நேரத்தில் சிறிய தேரும் புறப்படுவது வழக்கம். தேர்களுக்கு முன்பாக அலங்கரித்த யானைகளும், இதைத்தொடர்ந்து விநாயகர், முருகன், நாயன்மார்கள், சண்டிகேசுவரர் சுவாமிகள் எழுந்தருளி சப்பரங்களில் சென்றனர்.
கீழ மாசி, தெற்கு மாசி, மேலமாசி, வடக்குமாசி வீதிகளில் அசைந்தாடியபடி சென்ற தேர்களை ‘ஹரஹர சுந்தர மகாதேவா, சம்போ சங்கர மகாதேவா, மீனாட்சி, சுந்தர மகாதேவா’ என்று பக்தி கோஷங்களை எழுப்பியவாறு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
* மீனாட்சி திருக்கல்யாணமும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் பழைய காலத்தில் தனித்தனியே நடைபெற்றன. திருமலை நாயக்கர் காலத்தில் தான் இவ்விரு விழாக்களும் ஒன்றிணைக்கப்பட்டு சித்திரை மாதத்தில் ஒரே விழாவாக கொண்டாடப்பட்டுள்ளது.
* முதலில் அழகர் ஆற்றில் இறங்கும் விழாவானது சோழவந்தானில் நடைபெற்று வந்தது. பின் இந்நிகழ்ச்சி மதுரைக்கு திருமலை நாயக்கர் மன்னரால் மாற்றப்பட்டது.
* இவ்விழா சைவ மற்றும் வைணவ சமய ஒற்றுமையுடன் அக்காலத்தில் காணப்பட்ட சாதி வேறுபாடுகளை களையும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டதாக கருதப்படுகிறது.