ஆதனூர் PT
கோயில்கள்

திவ்யதேசம் 11 | இந்திரனுக்கு சாபவிமோசனம் அளித்த புகழ்நிறைந்த ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் ஆலயம்!

இத்தலத்தில் காமதேனு தவம் இருந்ததால், இதற்கு ஆதனூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

Jayashree A

108 திவ்யதேசத்தில் 11வது திருத்தலமான ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் கோவில் குறித்து இன்று பார்க்கப்போகிறோம். இது தஞ்சாவூருக்கு அருகில் அமைந்துள்ளது. திருமங்கை ஆழ்வாரால் ‘திருக்குறுந்தாண்டகத்தில் ஆண்டளக்கும் ஐயனும்! என்னை மனங்கவர்ந்த ஈசன்’ என்ற பதிகத்தை பெற்ற தலம் இது.

இங்கு பெருமாள் சயனித்த திருக்கோலத்தில், தலையணையாக மரகாலையும் (அளக்க உதவும் படியையும்) இடது கையில் ஓலைச்சுவடி, எழுத்தாணியை ஆகியவற்றையும் தாங்கியபடி அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். இங்கு காமதேனுவானது தவம் இருந்ததால் இத்தலத்துக்கு ஆதனூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

இத்தலத்திற்கு பல புராண கதைகள் இருந்தாலும், முக்கியமான இரு கதைகளை பார்க்கலாம்.

அதற்கு முன், இத்தலத்தின் விவரங்கள்:

ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் பெயர்கள் : அழகிய மணாவாளன், ரெங்கநாதன்

தாயார் பெயர்: பார்கவி ரங்கநாயகி

மூலவர்: ஆண்டளக்கும் ஐயன்

விமானம்: ப்ரணவாகார விமானம்

ஸ்தல விருட்சம்: பாடலி மரம்

தீர்த்தம்: சூர்ய தீர்த்தம்

ஊர் : ஆதனூர், தஞ்சை மாவட்டம்.

புராணக்கதைகள்:

(வித்யாதரர்கள்: இவர்கள் தேவலோகத்தில் தேவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள். பல கலைகளில் சிறப்புற்று விளங்குபவர்கள்)

ஒரு சமயம் தேவலோகத்தில் வித்தியாதர பெண் ஒருத்தி மகாலெஷ்மியை துதித்து வீணை மீட்டு பாடினாள். அதில் மகிழ்ந்த லெஷ்மி தாயார், அப்பெண்ணுக்கு தனது மாலையை பரிசாக தந்தாள். அப்பெண் அதை மகிழ்சியுடன் வாங்கி சென்றாள். வழியில் துர்வாச முனிவரை சந்தித்த அப்பெண் நடந்தவற்றை விவரித்து அந்த மாலையை துர்வாசருக்கு வழங்கினாள்.

துர்வாசரும் அதை ஆசையாக வாங்கிக்கொண்டு இந்திரலோகம் சென்று, இந்திரனுக்கு பரிசாக இந்த மாலையை தந்தார். ஆனால் இந்திரனுக்கு இந்த மாலையின் பெருமை தெரியாமல் தனது வெள்ளை யானைக்கு அந்த மாலையை அணிவித்தான்.

வெள்ளை யானையானது தன் தலையை ஆட்டவும், அந்த மாலையானது அதன் கழுத்திலிருந்து நழுவி கீழே விழுந்தது. இதில் மாலை யானையின் காலில் மிதிபட்டது. இதை கண்டு கோபம் கொண்ட துர்வாசர் இந்திரனுக்கு, “நீயும், தேவர்களும் உங்கள் பலத்தை இழந்து துன்புறுவீர்கள்” என்று சாபமிட்டார்.

வருத்தம் கொண்ட இந்திரன், மகாலெஷ்மியிடமே சென்று, “அம்மா... இது தங்கள் கழுத்தை அலங்கரித்த மாலை என்று தெரியாமல் தவறு செய்துவிட்டேன். ஆகையால் என்னை மன்னித்து சாபவிமோட்சனம் தாருங்கள்” என்று கேட்கவே... மகாலெஷ்மி தாயாரும் மனமிறங்கி, “கவலைப்படாதே இந்திரா.. நான் பிருகு முனிவரின் பெண்ணாக பார்கவி என்ற பெயரில் பூளோகத்தில் அவதரிப்பேன். அச்சமயம், பெருமாளுக்கும் எனக்கும் நடக்கவிருக்கும் திருமண வைபவத்தில் நீ கலந்துக்கொண்டு எங்கள் ஆசியை பெற்றால் உனக்கு சாபவிமோசனம் கிடைக்கும்” என்றாள். அதே போல் இந்திரன் வந்து தரிசித்து சாபவிமோசனம் பெற்ற திருத்தலம் இது என்று புராணங்கள் கூறுகிறது.

இத்தலத்தில் பெருமாள் எதற்காக படியுடன் காட்சி தருகிறார் என்பதற்கும் அருமையான ஒரு புராணக்கதை உள்ளது. அதையும் தெரிந்துக்கொள்ளலாம்.

இத்திருதலத்தில் திருமங்கை ஆழ்வாருக்கும், பெருமாளின் கையிலிருக்கும் மரகாலுக்கும் ஒரு தொடர்பு உண்டு.

திருமங்கை ஆழ்வாருக்கு ஸ்ரீரங்கத்தை சுற்றி மதில் சுவர் கட்ட வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை. அப்படி இப்படி என்று அதை ஒருவழியாய் கட்டியும் முடித்து விட்டார். ஆனால் அவரால் அங்கு வேலை செய்பவர்களுக்கு கூலி தர இயலவில்லை.

“என்ன செய்வது?” என்று யோசித்துக் கொண்டிருந்த சமயம் ஆதனூர் வந்தார். அவ்வூரில் ஒரு வணிகன் ஒருவன் திருமங்கை ஆழ்வாரை சந்தித்து, “ஐயா... நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். அதில் பெருமாள், என்னிடம் நீங்கள் துன்பத்தில் இருப்பதாகவும் ஆகையால் உங்களுக்கு உதவும் படியும் என்னை பணிந்தார். உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?” என்று கேட்டார்.

திருமங்கை ஆழ்வாரும் அவரிடம் நடந்தவற்றைக்கூறி, ”வேலை செய்தவர்களுக்கு கூலி வழங்கணும். ஆகையால் எனக்கு சில பொற்காசுகள் வேண்டும்” என்று கூறினார்.

”இவ்வளவுதானா...?” என்றவர், “பொன்னை போடுகிறேன் பிடியுங்கள்” என்றவர், கையிலுள்ள மரகாலால் திருமங்கை ஆழ்வாருக்கு, மண்ணை அளந்து அளந்து கொடுத்து, கொடுத்த கணக்கை தனது ஓலைசுவடியில் எழுதியும் வைத்துக்கொண்டார்.

திருமங்கை ஆழ்வாருக்கு ஏதும் புரியவில்லை... “ஐயா வணிகரே... நான் தங்களிடம் மண் கேட்கவில்லை என்னிடம் வேலை செய்தவர்களுக்கு கூலி தர பொற்காசுகள் அல்லவா கேட்டேன்...? ஆனால் நீங்கள் மண்ணை அல்லவா அளந்து அளந்து தந்துக்கொண்டு இருக்கிறீர்கள்” என்றார்.

“ஐயா... ஆழ்வாரே... நான் சொல்வதை கேளும். உன்னிடம் வேலை செய்தவர்களுக்கு கூலியாக இதை கொடும். ஒழுங்காக உழைத்தவனுக்கு இது பொன்னாகத்தெரியும். ஒழுங்காக வேலை செய்யாதவனுக்கு இது மண்ணாகத் தான் தெரியும்” என்றார், திருமங்கை ஆழ்வாருக்கு இதன் அர்த்தம் புரியவில்லை. இருப்பினும் ஏதும் பேச இயலாதவராய், மூட்டை மூட்டையாக மண்ணை பெற்று வந்து, தன்னிடம் வேலை செய்தவருக்கு கூலியாக மண்ணை அளந்து தந்தார்.

ஆனால் எல்லோரும் ஏகோபித்து திருமங்கை ஆழ்வாரிடம் கேள்வி எழுப்ப... திருமங்கை ஆழ்வார் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். “சரி என்னுடன் வாருங்கள் அந்த வணிகரை சந்தித்து கேள்வி கேட்டு வரலாம்” என்று கூறி, கூலி ஆட்களுடன் சென்று அந்த வணிகரை சந்தித்தார். அங்கு சென்றவுடன் கூலி ஆட்கள் அனைவரும் இணைந்து “ஐயா வணிகரே... எங்களைப் பார்த்தால் தங்களுக்கு எப்படி தெரிகிறது? உம்மை விட்டேனா பார்...” என்று கேட்டு வணிகரை துரத்த தொடங்கிவிட்டர்.

வணிகரோ தப்பித்தால் போதும் என்று கையில் படியுடன், மண் அளந்து எழுதிய ஓலைச்சுவடியுடன் ஒரே ஓட்டமாக ஓடி இத்தலம் இருக்கும் இடத்தில் வந்து மறைந்து விட்டாராம். அப்போது அவரை தொடர்ந்து தேடி வந்த திருமங்கை ஆழ்வாருக்கு சயனித்த பெருமாளாய் தலைக்கு அடியில் மரகலத்துடன் கையில் ஓலைச்சுவடி எழுத்தாணியை பிடித்தபடி இத்திருத்தலத்தில் காட்சி கொடுத்தாராம் ரெங்கநாதர்.

திவ்ய தேசத்தில் 11-வது ஸ்தலமான ஆதனூர் ஆண்டளக்கும் ஐயனை தரிசித்தால் கல்வியில் சிறக்கலாம் என்பது நம்பிக்கை.