உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இன்று நான்காம் நாள் ஆட்டம் நடக்கிறது. முன்னதாக, இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்த இந்திய அணி 151 ரன்கள் 5 விக்கெட்டுகளை இழந்து 318 ரன்கள் பின்தங்கி இருந்தது. நேற்று தொடங்கிய மூன்றாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி 172 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.
இதையடுத்து, ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்ஸை ஆடியது. டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா இருவரும் 2வது இன்னிங்ஸை தொடங்கினர். இதில், முகமது சிராஜ் வீசிய 3.3வது ஓவரில் டேவிட் வார்னர், விக்கெட் கீப்பர் கேஎஸ் பரத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்க வேண்டிய லாபுஷான் பெவிலியனில் சேரில் அமர்ந்து சற்று கண் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். வார்னர் ஆட்டமிழந்ததை தொடர்ந்து இந்திய ரசிகர்கள் உற்சாகத்தில் கத்தினர். ரசிகர்களின் கரகோஷத்தால் திடுக்கிட்டு கண் விழித்துப் பார்த்த லாபுஷான், வார்னர் ஆட்டமிழந்ததை அறிந்து உடனடியாக பேட்டிங் செய்ய களமிறங்கினார்.
வார்னர் விக்கெட் போனதுகூட தெரியாமல் பெவிலியனில் தூங்கிக் கொண்டிருந்த லாபுஷானின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு அருமையான கன்டென்ட் கொடுத்துள்ளதாக அமைந்துவிட்டது.