மருத்துவம் படிக்கச் சென்ற மாணவர் நவீன் உக்ரைனில் உயிரிழந்திருப்பது, மற்ற பெற்றோர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன்மீது ரஷ்யா நடத்திவரும் தாக்குதலால் இந்திய மாணவர்கள் படும் சிரமம் பற்றியும், இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்தும் புதிய தலைமுறையின் நியூஸ் 360 நிகழ்ச்சியில் பகிர்ந்துகொண்ட தகவல்களை பார்க்கலாம்.
கல்லூரிகளில் பெறப்படும் நன்கொடை போன்றவற்றால் அறிவார்ந்த மாணவர்கள் கூட வெளிநாடுகளுக்குச் சென்று படிக்க வேண்டியுள்ளது. இங்கு கல்வி கற்க கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருக்கிறது. குறைவான பணத்தில் இங்கு இருப்பதைவிட சிறந்த கல்வியை வெளிநாடுகளில் பயில முடிகிறது. 97% மதிப்பெண்கள் எடுத்தும் எனது மகனுக்கு இங்கு இடம் கிடைக்கவில்லை.
கர்நாடகா காணொளியில் நம்பிக்கையோடு பேசும் இந்த மாணவர்தான் நவீன். கர்நாடகா மாநிலம் பெங்களூருவுக்கு அருகேயுள்ள CHALAGERI-ஐ சேர்ந்த இவர், உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கிவ்வில் 4ஆம் ஆண்டு மருத்துவம் பயின்று வந்தார். கார்கிவ்வை கைப்பற்ற வேண்டும் என ரஷ்யா கடுமையாக தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியாவிலுள்ள நவீனின் பெற்றோர் அஞ்ச அவர்களுக்கு தன் வார்த்தைகள் மூலம் நேற்றுக்கூட நம்பிக்கை விதைத்துள்ளார். அவரது உறவினர்களும் கார்கிவ்வில் சிக்கியிருந்த நவீன் மற்றும் அவனது நண்பர்களை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் நவீன் இறந்துவிட்டார் என்ற செய்தி பேரிடியாய் பெற்றோர் இதயத்தை கிழித்துள்ளது. தங்குமிடத்திலிருந்து இன்று காலையில் வெளியில் வந்த நவீன், வானிலிருந்து பொழிந்த குண்டுமழையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அவரின் மொத்த குடும்பமும் நிலை குலைந்துவிட்டது. நவீனுடன் சென்ற மற்றொரு மாணவர் படுகாயம் அடைந்துள்ளார். தனது மகனின் உடலை தாயகம் எடுத்துவர அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என நவீனின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். போரின் போது உருக்குலைவது கட்டடங்கள் மட்டுமல்ல. நவீன் போன்றோரின் கனவுகளும்தான்.
இதுதொடர்பாக புதிய தலைமுறையின் நியூஸ் 360 டிகிரி நிகழ்ச்சியில் முன் வைக்கப்பட்ட கருத்துக்களை பின்வரும் வீடியோ தொகுப்பில் காணலாம்.