உக்ரைனில் ரஷ்ய தாக்குதல் நீடித்து வரும் நிலையில், வரலாற்றிலேயே முதல்முறையாக 40,000 வீரர்களைக் கொண்ட படையை நேட்டோ தயார்ப்படுத்தியுள்ளது.
வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பான நேட்டோவில் உக்ரைன் இணைவதை எதிர்த்து, அந்நாட்டின் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்து வருகிறது. உக்ரைன் இன்னும் நேட்டோவில் உறுப்பினராக ஆகாததால், ரஷ்யாவுக்கு எதிராக அந்த அமைப்பின் படைகள் உக்ரைனுக்குள் செல்லவில்லை. எனினும், உக்ரைனின் அண்டை நாடுகளான லாட்வியா, எஸ்டோனியா, லிதுவேனியா, போலந்து ஆகிய நாடுகளில் 5 ஆயிரம் நேட்டோ படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவாக, தற்போது 40 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏவுகணை அழிப்பு கருவியை ஸ்லோவாகியாவில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது. பொருளாதாரத் தடைகள் மற்றும் ஐ.நா. எச்சரிக்கையை மீறி உக்ரைனில் ரஷ்யா போரைத் தொடர்ந்தால், உக்ரைனுக்கு உதவ அவசர கால ஏற்பாடாக 40 ஆயிரம் நேட்டோ வீரர்களை தயார்ப்படுத்தி வருவதாக நேட்டோ சுப்ரீம் கமாண்டர் ஜெனரல் டாட் வோல்டர்ஸ் தெரிவித்துள்ளார்.