இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்திருந்தார். தற்போதுதான் அதிலிருந்து அவர் மெல்ல மெல்ல குணமடைந்து வருகிறார். காயத்தின் காரணமாக, அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தும் விலகியுள்ளார். ரிஷப் பண்ட் முழுமையாக குணமடைந்து கிரிக்கெட் விளையாட இன்னும் 8 முதல் 9 மாதங்கள் ஆகும் என்றும் இதனால் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் ரிஷப் பண்ட் விளையாடமாட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், சிகிச்சைக்கு பின் மெல்ல குணமடைந்து வரும் ரிஷப் பண்ட், தற்போது பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தனது மறுவாழ்வு (rehabilitation programme) பயிற்சியை தொடங்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தையும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக போட்டிருக்கிறார்.
ரிஷப் பண்ட் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ள நிலையில் அவர் விரைவில் உடற்தகுதி பெற்று அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முன்னதாக, நடப்பு ஐபிஎல் சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் டெல்லி கேபிடல்ஸ் விளையாடிய போட்டியை காண ரிஷப் பண்ட் நேரில் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.