அராபிய வளைகுடாவில் மன்னராட்சி நடக்கும் நாட்டில் வாரிசுப்போட்டியின் களம் ஒருபுறம். மிக நுண்ணிய அரசியல் முடிவெடுப்புகளில் கார்பரேட் சாமியார்களின் ஈடுபாடு ஒருபுறம். எவ்வளவு உயரத்திற்குப் போனாலும் ஒரு எளிய பெண் தன் மேல் அன்பு செலுத்த ஒரு உண்மையான ஆன்மா இருக்காதா எனத்தேடும் அலைதல் ஒருபுறம். இந்த மூன்று களங்களையும் இணைத்து பின்னப்பட்டிருக்கிறது இக்குறுநாவல்.
தொடரின் பிற அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்
இத்தொடரின் 17-ம் அத்தியாயம் இதோ....
”பார்த்தேன் ஸ்வாமி, அது என்ன?”
“அவை ட்ரோனில் வைத்து அனுப்பப்பட்டிருக்கும் கேமராக்கள். நான் இங்கு வந்த நாளிலிருந்து என்னைத்தொடர்ந்து கொண்டிருக்கின்றன. யார் அனுப்பினார்கள், எதற்கென்று கூட எனக்குத்தெரியாது. நம் நாட்டிலிருந்து வந்திருக்கலாம், இல்லை இந்த நாட்டு அரசாங்கம் செய்திருக்கலாம், ஷேக்கின் சகோதரர்கள் அவரிடம் நான் என்ன பேசுகிறேன் என்று தெரிந்துகொள்வதற்காக அனுப்பியிருக்கலாம், ஏன், ஷேக்கே உன்னிடம் நான் என்ன பேசுகிறேன் என்று தெரிந்துகொள்வதற்காக அனுப்பியிருக்கலாம்” என்று அலர்ந்தார்.
“என்றால்… நான் பேசியது அவர்களுக்கு கேட்டிருக்குமா”
பதறினேன்.
“பயப்படாதே, உன் கைப்பையின் மேலே ஒரு சின்ன ஹேர்கிளிப் இருப்பதைப் பார்த்தாயா, அது வாய்ஸ் சிமுலேட்டர். இங்கிருந்து சில நூறு கிலோ மீட்டர்களுக்கு அது எதையும் கேட்கவிடாது, இதை அவர்கள் கண்டுபிடிக்க ஒரு மணி நேரம் ஆகும், அதற்குள் நாம் கிளம்பிவிடலாம்”
வியர்த்தது. இதை எங்கே கொண்டு வந்தார், எப்படி என் ஹேண்ட்பேகில் பொருத்தப்பட்டது!
”இப்படியெல்லாம்தான் என் வாழ்வு நகர்கிறது மிருணாளினி. நான் சாவிற்கு அச்சப்பட்டவனில்லை. ஆனால் நான் விதித்துக்கொண்ட வேலை முடியும் வரையில் அதற்கான எல்லா முன்னேற்பாடுகளையும் செய்துகொண்டே தீருவேன். ஆனால் அது என்னைத்தாண்டி யாரையும் பாதித்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்”
சாவதானமாக அவரைப்பார்த்தேன். அவர் ஒரு புதிர்தான். சந்தேகமே இல்லை. அதனால் என் உள்ளம் எந்த மாற்றத்திற்கும் உட்படப்போவதில்லை என்று என்னுள்ளேயே உறுதி செய்துகொண்டேன்.
”சரி, கடந்த இரண்டு மூன்று சந்திப்புகளாகவே உன் பேச்சிலும், சைகையிலும் வந்திருந்த மாற்றங்களை நான் உணர்ந்திருந்தேன் மிருணாளினி. நீயாகச் சொல்லாதவரையில் உன்னிடம் இதைப்பற்றிப் பேசுவது நியாயமல்ல என்பதால் நான் எதுவும் கேட்காமலிருந்தேன். நான் ஏற்கனவே சொன்னதுபோல, என்னுடன் வருவதற்கு இதுவரை யாரும் சம்மதம் கோரியதில்லை. என் வாழ்வு கடினமானது என்பது அவர்களுக்குத் தெரியும். நீ அந்த கடினத்தை ஏற்பதாயிருந்தால், நான் அதனை பரிசீலிப்பேன்” என்றார். இறுகியிருந்த அவர் முகத்தில் மீண்டும் அவருடைய புன்னகை விரிந்திருந்தது.
நிர்தாட்சண்யமாக காலில் விழுந்தேன். உள்ளம் உடைந்து உருகிக் கண்ணீராய்ப் பெருகிக்கொண்டிருந்தது.
“இது என் பாக்கியம் ஸ்வாமி. முற்றிலும் துறந்துதான் உங்களை அடையவேண்டுமென்பது என் அவாவும். எல்லாவற்றையும் இப்போதே துறந்துவிட்டு உங்களுடன் கிளம்பி வருகிறேன், சொல்லுங்கள், எப்போது போகலாம்”.
“உன்னை முற்றிலும் துறக்கச் சொல்லும் அளவுக்கு நான் கல்நெஞ்சக்காரனில்லையம்மா. என்னிடம் வருவதாலேயே எல்லாவற்றையும் நீ துறந்து வரவேண்டிய அவசியமும் இல்லை.. ஒருவேளை பிற்காலத்தில் உன் மனம் மாறினால் அதை நீ தாராளமாக கைக்கொள்ளளலாம். அதற்காக வேண்டுமானால் ஒரு உபாயம் சொல்கிறேன்”
“நிச்சயம் அப்படியெல்லாம்…”
என்னை கையமர்த்தினார்
“நீ சொல்வதை நான் கேட்டேன் இல்லையா, இனி நான் சொல்வதை நீ கேட்டே ஆகவேண்டும். செய்”
அவர் கட்டளையாக என்னிடம் எதுவுமே சொன்னதில்லை. மெள்ள கைகூப்பி
“கேட்கக்காத்திருக்கிறேன் ஸ்வாமி”
தொடர்ந்தார்.
“உன்னுடைய மொத்த சேமிப்புகளையும், பாண்ட், டெபாசிட்கள் எல்லாவற்றையும் ஒரு பிவிஐ கம்பெனி அல்லது சில பிவிஐ கம்பெனிகளுக்கு மாற்றிவிடு. உடனேயே. எவ்வளவு நாட்களாகும்?
சதுரங்கத்தில் சடசடவென வெட்டப்படும் காய்கள் போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் நகரும் இந்தக்கேள்விகளை எப்படி எதிர்கொள்வதென்று தெரியாமலே அலைபாய்ந்துகொண்டிருந்தேன்.
பிவிஐ கம்பெனிகள் என்றால், கற்பனையாக உருவாக்கப்படும் கம்பெனிகள். கருப்பை வெண்மையாக்க பணத்தை எங்கேயோ முதலீடு செய்துவைத்திருக்கிறோம், ஆனால் அதற்கு வரி கிடையாது என்று ஆதாரம் காட்டுவதற்காகவே உருவாக்கப்படும் காகித நிறுவனங்கள்.
”ஸ்வாமி”
“நான் விளையாடவில்லை மிருணாளினி , சீரியசாகவே கேட்கிறேன், சொல்”
“அவசரமென்றால் 5 நாட்களுக்குள் செய்துவிடலாம் ஸ்வாமி. இல்லையென்றால்…”
“அவசரம்தான். எதுவும் நிலையில்லை இவ்வுலகில். அடுத்த 5 நாட்களுக்குள் அத்தனையும் மாற்றி எல்லா டாகுமெண்ட்களின் சுவடின்றி ஏதேனும் ஒரு ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பிவிடு. உனக்கென ஒரே ஒரு அல்லது ஒரு சில மாற்றுத்துணிகள், அத்தியாவசியங்கள் கொண்ட ஒரெ ஒரு சிறு பெட்டியை மட்டும் தயாராக வைத்துக்கொள். நேரம் வரும்போது புறப்படவேண்டியிருக்கும்” என்றார்.
ஒரு முடிவு நான் எதிர்பார்த்த முடிவு, இவ்வளவு வேகமாக செயல்திட்டத்தோடு நிறைவுறும் என்பதையெல்லாம் நான் நினைத்திருக்கவே இல்லை. இந்த முடிவு வந்தால் எப்படிக்கொண்டாட வேண்டுமென்று கூட என் மனம் தயாராகியிருக்கவில்லை.
ஒரு டம்ளர் பாலை ஒரே மடக்கில் குடித்துவிட்டு, “நேரமாகிவிட்டது போகலாமில்லையா, இன்னும் சில நிமிடங்களில் அவர்கள் அந்த வாய்ஸ் ஸ்டிமுலேட்டரை ஆக்டிவேட் செய்யக்கூடும்”
என்று கூறிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காது காரை நோக்கி சென்றார்.
நான் மகிழ்வதா, மருள்வதா என திசையறியாது தவித்துக்கொண்டிருந்தேன். ஆனால் சில நிமிடங்களில் சுதாரித்துக்கொண்டு, நான் எதைகேட்டு வந்தேனோ அதை ஸ்வாமி அநேகமாக அங்கீகரித்துவிட்டார் என்றே நினைத்தேன். அவர் சொல்வதை அவர் சரியாகப்புரிந்து கொண்டிருந்திராவிட்டால் ஏன் இவ்வளவு ஏற்பாடுகள் செய்யச்சொல்லவேண்டும். அது என்ன காரணமாக வேண்டுமானாலும் இருக்கட்டும், உடனேயே பகுத்தறிந்துய்யாமல், அவர் சொன்னதைச்செய்ய ஆரம்பித்தேன், பெருமகிழ்வுடன்.