இந்தியா

800 பேருக்கு வேலைவாய்ப்பு - ஸொமேட்டோவின் மாஸ் அறிவிப்பு

800 பேருக்கு வேலைவாய்ப்பு - ஸொமேட்டோவின் மாஸ் அறிவிப்பு

JustinDurai

நிலையற்ற பொருளாதார சூழல் காரணமாக ஆளாளுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கையை கையிலெடுத்துள்ள நிலையில், தங்களது நிறுவனத்தில் புதிதாக 800 பேருக்கு வேலை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது ஸொமேட்டோ.

உலகம் முழுவதும் நிலவிவரும் பொருளாதார மந்தம் காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் நிலை மிகவும் கவலைக்குரியதாக மாறியுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை கொத்துக்கொத்தாக வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. நிலையற்ற பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு ஆளாளுக்கு ஆட்குறைப்பு நடவடிக்கையை கையிலெடுத்துள்ள நிலையில், தங்களது நிறுவனத்தில் புதிதாக 800  பேருக்கு வேலை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது  பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஸொமேட்டோ.

இதுகுறித்து ஸொமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல், லிங்க்ட்இன்னில் வெளியிட்ட பதிவில் ''எங்கள் நிறுவனத்தில் 800 வேலை வாய்ப்புகள் உள்ளன. தலைமைச் செயல் அதிகாரி, வளர்ச்சி மேலாளர், தயாரிப்பு உரிமையாளர், மென்பொருள் மேம்பாட்டுப் பொறியாளர் உள்ளிட்ட 5 பிரிவுகளில் 800 வேலைகள் உள்ளன. இந்த பதவிகளுக்கு உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தாலும் பரிந்துரை செய்யுங்கள். deepinder@zomato.com என்கிற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்'' என்று பதிவிட்டுள்ளார்.

சமீபத்தில், ஸொமேட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் கையில் பணம் கொடுத்தால் 800 ரூபாய் உணவுகள்கூட 200 ரூபாய்க்கு வழங்குவதாகக் கூறிய சம்பவம், தொழில்முனைவோர் ஒருவர் லிங்க்ட்இன்னில் பகிர்ந்ததன் மூலம் வெளிச்சத்துக்கு வந்தது. இதற்குப் பதிலளித்த சோமேட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல், `இது குறித்து அறிந்திருக்கிறேன். இவற்றைச் சரிசெய்ய வேலை செய்கிறேன்’ எனப் பதிலளித்தார்.