இந்தியா

மார்பிங் போட்டோ காட்டி, மாசக்கணக்கில் சம்பாதித்த டுபாக்கூர்!

மார்பிங் போட்டோ காட்டி, மாசக்கணக்கில் சம்பாதித்த டுபாக்கூர்!

Rasus

மாடலின் புகைப்படத்தை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் பாலியல் தொழிலாளி என பதிவேற்றி பணம் பறித்த டுபாக்கூர் வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மும்பை குர்லாவை சேர்ந்தவர் கவுசர் கான் (22). இவர் மும்பையில் மாடலிங் துறையில் இருக்கும் அழகான இளம் பெண் ஒருவரின் புகைப்படத்தை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்தார். பின்னர் அதை நிர்வாண படத்துடன் மார்பிங் செய்தார். இன்ஸ்டாகிராம் மற்றும் சில டேட்டிங் தளங்களில் பாலியல் தொழிலாளி எனக் குறிப்பிட்டுப் பதிவேற்றினார். தொடர்பு எண் என அவரது செல்ஃபோன் நம்பரையே குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து சிலர் அந்த எண்ணுக்கு ஃபோன் செய்தனர். அவர்களிடம் பேசிய கான், முதலில் அட்வான்ஸாக பேடிஎம் மூலம் எனக்கு பணம் அனுப்புங்கள் என்று கூறியுள்ளான்.

இதை உண்மை என்று நம்பி, சபல புத்திக்காரர்கள் பலர் பணம் அனுப்பி ஏமாந்துள்ளனர். அவர்களிடம் பாலியல் ரீதியாக ஆசையை வளர்த்து இன்னும் அதிகமாகவே பணம் பறித்திருக்கிறான் இந்த கில்லாடி கான். இதை ஒரு தொழிலாகவே செய்து வந்திருக்கிறான்.

இந்த விஷயம் சில மாதங்களுக்குப் பிறகுதான் சம்மந்தப்பட்ட மாடலுக்குத் தெரிய வந்திருக்கிறது. நொந்து போன அவர், கண்ணீருடன் போலீசில் புகார் செய்ய, அவர்கள் கான் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு ஃபோன் செய்து பேசினர். அவர்களிடமும் அப்படியே பேடிஎம்மில் பணம் அனுப்ப கூறியிருக்கிறான். இதையடுத்து அவனை பின் தொடர்ந்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.