மாற்றம் சாத்தியம் என்பதை நிரூபித்திருக்கிறீர்கள் என்று ட்ரம்ப் மகள் இவாங்கா மோடிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்வதேச தொழில் முனைவோர் மாநாட்டில் பங்கேற்ற இவாங்கா, உங்களது சாதனை உண்மையில் அசாதாரணமானது என்று மோடியைப் புகழ்ந்தார். மோடி சின்ன வயதில் டீ விற்பனையில் ஆரம்பித்து இந்தியப் பிரதமராக உயர்ந்தது பற்றிக் குறிப்பிட்ட அவர், மாற்றம் சாத்தியம் என்பதை மோடி நிரூபித்திருக்கிறார் என்றார்.
பெண்களுக்கு அதிகாரம் அளிக்காமல் மனித குலத்திற்கு முன்னேற்றம் சாத்தியமில்லை என்ற கருத்தில் மோடி நம்பிக்கை வைத்திருப்பதாகக் குறிப்பிட்ட இவான்கா அதற்காகப் பாராட்டுத் தெரிவித்தார். பெண் தொழில் முனைவோருக்கு முதலீடு, தகவல் தொடர்பு, வழிகாட்டுதல் உள்ளிட்ட உதவிகள் கிடைக்க வேண்டும் என இவான்கா வலியுறுத்தினார்.
"பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கை உயர்ந்து வந்த போதிலும் இன்னும் தொழில் தொடங்குவது மற்றும் அவர்களின் தொழிலை வளர்ப்பதில் பெண்கள் பல்வேறு தடைகளைச் சந்தித்து வருவதாகக் கூறினார். பெண்கள் தொழில் நடத்துவதை வளர்ப்பது நமது சமூகத்திற்கு மட்டும் நன்மை அளிப்பதல்ல. நமது பொருளாதாரத்திற்கும் நன்மை அளிப்பது. உலக அளவில் தொழில் முனைவோர் மத்தியில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள இடைவெளியைக் குறைப்பது உலக அளவில் மொத்த உற்பத்திப் புள்ளியை 2 சதவீத அளவுக்கு உயர்த்தும்" என்றும் இவான்கா கூறினார்.
மாநாட்டில் இடம்பெற்றுள்ள பல்வேறு கண்காட்சிகளை மோடியும் இவாங்காவும் பார்வையிட்டனர். இரு நாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார் இவாங்கா.