இந்தியா

எடியூரப்பாவின் ஆடியோவை ஆதாரமாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

எடியூரப்பாவின் ஆடியோவை ஆதாரமாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

webteam

கர்நாடகத்தில் 17 எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது தொடர்பான வழக்கில், எடியூரப்பாவின் ஆடியோவை ஆதாரமாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கர்நாடகத்தில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளக் கட்சிகளை சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவை மீறியதால், கட்சித் தாவல் தடை சட்டத்தின்கீழ் அவர்களின் பதவியை அப்போதைய சபாநாயகர் பறித்தார். இதை ரத்து செய்யக்கோரி 17 பேரும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

விசாரணை முடிவடைந்து நீதிபதிகள் என்.வி.ரமணா தலைமையிலான அமர்வில் தீர்ப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அண்மையில் பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் எடியூரப்பா பேசியதாக ஆடியோ ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. 

17 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் அனைத்து ஏற்பாடுகளையும் மேற்பார்வை செய்தது அமித்ஷாதான் என்று கூறுவதுபோல அந்த ஆடியோவில் பதிவாகியிருந்தது. இதை ஒரு ஆதாரமாக ஏற்கக் கோரி காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்ட உச்ச நீதிமன்றம், இருப்பினும் ஆடியோவை கருத்தில் கொள்வதாகக் கூறியுள்ளது. 

புதிய ஆதாரத்தை ஏற்பது தீர்ப்பை தாமதப்படுத்தவே வழிவகுக்கும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.